ஆளுநரின் நடவடிக்கையை சகித்துக்கொள்ள முடியாததால் தான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தோம், ஆளுநர் இறங்கி வந்தாலும் வழக்கில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாநில அரசுக்கே திருப்பி அனுப்பிய நிலையில், சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, அந்த மசோதாக்களை மீண்டும் தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பியுள்ளது. முன்னதாக, தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களை ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் நீண்ட காலமாக கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆளுநர்களுக்கு சட்டசபை மசோதாக்களை நிறுத்தி வைக்கும் அதிகாரம் கிடையாது. 3 ஆண்டுகளாக மசோதாக்களை நிலுவையில் வைத்து கொண்டு என்ன செய்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. 2020ஆம் ஆண்டு முதல் 180 மசோதாக்களில் 152 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துவிட்டார் என மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். அதற்கு, மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்துக்கு வரும் வரை மாநில ஆளுநர்கள் ஒப்புதல் தராதது ஏன்? என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில், புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டியது ஆளுநரின் கடமை. 10 மசோதாக்களையும் மீண்டும் நிறைவேற்றி 18ஆம் தேதி தினம் பிற்பகல் 3 மணிக்கே ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. அண்மையில் அனுப்பப்பட்ட 5 மசோதாக்களையும் ஆளுநர் ரவி நிலுவையில் வைத்துள்ளார். இத்தனை மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துவிட்டேன் என்று கூறிவிட்டு எஞ்சிய மசோதாக்களை நிலுவையில் வைப்பது அழகல்ல. சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானம், ஆளுநர் அந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க உதவியாக இருக்கும். தமிழக ஆளுநருக்கு எதிராக தொடர்ந்த வழக்குகளில் முன்வைத்த காலை பின்வைக்க மாட்டோம். ஆளுநர் இறங்கி வந்தாலும் வழக்கில் இருந்து பின்வாங்கப் போவதில்லை. ஆளுநரின் நடவடிக்கையை சகித்துக்கொள்ள முடியாததால் தான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தோம்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் ரகுபதி, “முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பிவி ரமணா ஆகியோர் மீதான விசாரணைக்கு அனுமதி தந்ததை ஆளுநர் அன்றே தெரியப்படுத்தி இருக்கலாம். குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர்களை விசாரிக்க ஆளுநர் ஒப்புதல் தந்ததை சிபிஐ-க்கு தெரிவிப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.