தமிழக அமைச்சர் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான திருவண்ணாமலையில் உள்ள அருணை மருத்துவக் கல்லூரியில் வருமான வரித் துறை அதிகாரிகள் இன்று (புதன்கிழமை) சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரியில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டனர். மருத்துவமனை அலுவலகத்துக்கு வந்த 6 வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வருமான வரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், 20-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலுவுடன் தொடர்புடைய இடங்களில் கடந்த 3-ம் தேதி முதல் நவ.9ம் தேதி வரையிலான 6 நாட்கள் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சென்னையில் அமைச்சருக்கு தொடர்புடைய இடங்கள் மற்றும் தி.நகரில் உள்ள அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவன அலுவலகம், காசா கிராண்ட் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் 6 நாட்ளாக சோதனை நடந்தது. இதேபோல,பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரர்கள், ஃபைனான்சியர் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. 6 நாட்களாக நடைபெற்ற சோதனை நேற்று நிறைவடைந்ததாகவும், இதில் முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் தரவுகள், பணம், நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், இன்று நடைபெறும் இந்த சோதனையில் விடுபட்ட ஆவணங்கள் அல்லது ஏற்கெனவே கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.