கும்பகோணம் சித்த வைத்தியர் வீட்டை சுற்றி தோண்ட தோண்ட எலும்புகள்!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே இளைஞரை கொன்ற வழக்கில் கைதான சித்த வைத்தியர் வீட்டினை சுற்றி, ஏராளமான எலும்புகள் இருப்பதால் போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவரை காவலில் எடுத்து விசாரித்தால் தான் உண்மை தெரியும் என்பதால், அவரை காவலில் எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சோழபுரம் மணல்மேடு என்ற கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவருடைய மகன் அசோக் ராஜன். இவருக்கு 27 வயது ஆகிறது. சென்னையில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த அசோக் ராஜன், தீபாவளிக்கு ஊருக்கு வந்துள்ளார். அதன்பிறகு அவரை காணவில்லை. இதுகுறித்து அசோக் ராஜன் குடும்பத்தினர் சோழபுரம் போலீஸாரிடம் புகார் அளித்தனர். புகாரின் பேரில் விசாரித்த போது, அசோக் ராஜனுடன் சித்த வைத்தியரான கேசவமூர்த்தி(47) என்பவர் நெருங்கிய தொடர்பில் இருந்தது தெரியவந்ததது. அவர் தான் அடிக்கடி அசோக் ராஜனுடன் பேசியவர் என்பதால் அவரை பிடித்து போலீஸார் விசாரித்தனர். அப்போது, அசோக் ராஜனை அவர் கொலை செய்து, துண்டு துண்டாக வெட்டி வீட்டின் பின்புறம் புதைத்தாக கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸார், உடனடியாக சித்த வைத்தியர் கேசவமூர்த்தியை கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில் பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளது. கைது செய்யப்பட்டுள்ள கேசவமூர்த்தி, அந்தப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்டோருக்கு சுன்னத் செய்துள்ளார். அசோக் ராஜனுக்கும் அண்மையில் சுன்னத் செய்திருக்கிறார். அப்போது அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதுகுறித்து கேசவமூர்த்தியை தொடர்பு கொண்டு அசோக் ராஜன் கேட்டுள்ளார். தீபாவளி பண்டிகைக்கு ஊருக்கு வரும்போது தன்னிடம் வந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு கேசவமூர்த்தி கூறியுள்ளார். அதன்படி, கடந்த 13-ம் தேதி கேசவமூர்த்தியை அசோக் ராஜன் சந்திக்கச் சென்றிருக்கிறார். அப்போது, தவறான சிகிச்சையால் அசோக் ராஜன் பாதிக்கப்பட்டது உறுதியானது. இதனிடேய சேகவமூர்த்திக்கு தான் போலி மருத்துவர் என்பது வெளியில் தெரிந்துவிடும் என பயந்தார். இதனால் அசோக் ராஜனை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி வீட்டின் பின்புறம் புதைத்துள்ளார். ஒன்றும் தெரியாதது போல் இருந்துள்ளார். இந்தக தகவல்கள் விசாரணையில் தெரியவந்தது.

கேசவமூர்த்தியின் வீட்டை போலீசார் சோதனை செய்தனர். அப்போது வீட்டுக்குள் இருந்த ஒரு பெட்டியில் இருந்து, சில எலும்புகள் இருந்ததை கண்டனர். மேலும் சித்த வைத்தியரின் வீட்டைச் சுற்றிலும் பல இடங்களில் தோண்டிப் பார்த்தபோது ஏராளமான எலும்புகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சித்த வைத்தியர் கேசவமூர்த்தியை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர். விசாரித்தால் தான் பல உண்மைகள் வெளிவரும் என்று கூறப்படுகிறது. கும்பகோணம் அருகே சித்த வைத்தியர் வீட்டை சுற்றி தோண்ட தோண்ட எழும்புகள் இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.