குறைந்த விலையில் ஆவின் புதிய ரக பாலை அறிமுகம் செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன்

ஊட்டச்சத்துகளுக்கு ஏற்ப குறைந்தவிலையில் ஆவின், புதிய ரக பாலை அறிமுகம் செய்ய வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

ஆவின் நிறுவனம் பச்சை நிற பாக்கெட் பால் விற்பனையை நிறுத்திவிட்டு, புதிய ஆவின் டிலைட் எனும் பால் பாக்கெட்டை அறிமுகம் செய்யவுள்ளது. பச்சை நிற பால் பாக்கெட் 4.5 சதவீத கொழுப்பு சத்தை கொண்டது. ஆனால் புதிய ரக ஆவின் டிலைட் பால் 3.5 சதவீத கொழுப்பு சத்து மட்டுமே கொண்டுள்ளது. இதையும் அதே பச்சை நிற பால்பாக்கெட்டின் விலைக்கே விற்பது மறைமுகமாக மக்களை ஏமாற்றும் செயலாகும். புதிய ரக ஆவின் பால் பாக்கெட் மற்ற பால் பாக்கெட் வகைகளுடன் சேர்த்து விற்கப்பட வேண்டும். அதைவிடுத்து பச்சை நிற பால் பாக்கெட் விற்பனையை நிறுத்தும் முடிவு என்பது தேவையற்றது.

ஏழை, எளிய மக்கள் அதிகமாக ஆவின் பாலையே விரும்பி வாங்கும் நிலையில், ஆவின் நிறுவனம் இதுபோல செயல்படுவது நல்லதல்ல. புதிய ரக பால் அறிமுகம் என்ற பெயரில் மறைமுக விலையேற்றம், மக்களை தனியார் பால் பாக்கெட்டுகளை வாங்குவதற்கு திசை திருப்பும். எனவே அதிக கொழுப்பு சத்துடைய ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விற்பனை தொடரவேண்டும். புதிய ரக டிலைட் பாலின் நுண்ணூட்ட சத்துகளுக்கு ஏற்ப விலையை குறைத்து அறிமுகப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.