கே.பி.அன்பழகன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை டிசம்பர் 8-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், அவர் மனைவி மல்லிகா உள்ளிட்ட 11 பேர் மீது, வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக தருமபுரி மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 10 ஆயிரம் பக்கங்கள் அடங்கிய குற்ற பத்திரிக்கையை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கடந்த மே மாதம் தாக்கல் செய்தனர். கடந்த ஜூலை 13-ம் தேதி விசாரணை தொடங்க இருந்த நிலையில், இந்த வழக்கை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றும் பணி தொடங்கியது.

பின்னர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இருந்து, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு கடந்த 6-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டது. அன்று கே.பி.அன்பழகன் உள்ளிட்ட 11 பேரும் ஆஜரான நிலையில், விசாரணை நவம்பர் 22-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இன்று முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், அவர் மனைவி மல்லிகா உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகினர்.இருப்பினும், வரும் டிசம்பர் 8-ம் தேதிக்கு இந்த வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.