சபாநாயகர் அப்பாவுவுக்கு அமைச்சர் ஆக வேண்டும் என்று ஆசை இருக்கிறது: ஜெயக்குமார்

சபாநாயகர் அப்பாவுவுக்கு அமைச்சர் ஆக வேண்டும் என்று ஆசை இருக்கிறது போல. அதனால் தான் கம்பி கட்டும் கதை எல்லாம் சொல்கிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

ஜெயலலிதா மறைந்த போது 40 அதிமுக எம்எல்ஏக்கள் திமுகவுக்கு வர தயாராக இருந்தார்கள் என்று சபாநாயகர் அப்பாவு பேசினார். “ஜெயலலிதா மறைந்தபோது அதிமுக பல பிரிவுகளாகி 18 சட்டமன்ற உறுப்பினர்கள், ஆளுநரிடம் புகார் கொடுத்ததால் நீக்கப்பட்டனர். அதற்கு துணையாக இருந்தவர் டிடிவி தினகரன். திகார் சிறைக்கு தினகரன் போன அன்று காலையிலேயே நண்பர் ஒருவர் அழைத்தார். மு.க.ஸ்டாலினிடம் சொல்லுங்கள். 40 சட்டமன்ற உறுப்பினர்கள் தயாராக இருக்கின்றனர். நான் அழைத்து வந்து விடுகிறேன். அவர்கள் 40 பேரும் எங்கு செல்வது என்று தெரியாமல் இருக்கிறார்கள் என்றார். ஆட்சியில் இன்னும் 4 ஆண்டுகள் மீதம் இருக்கிறது. 10 வருடம் திமுக ஆட்சி இல்லாமல் இருக்கிறது. நிச்சயமாக இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையோடு மு.க ஸ்டாலினிடம் சொன்னேன். அதன்பிறகு ஓரிரு நாளில் மு.க ஸ்டாலின் சொன்னார். இந்த 40 பேரை நம்பி தான் நாம் ஆட்சி அமைக்கலாம் என்று நினைத்துவிட்டீர்களா.. ஒருபோதும் தேவையில்லை. நாம் மக்களிடம் செல்வோம். மக்கள் நமக்கு அந்த அதிகாரத்தை தந்தால் மட்டும் நாம் ஆட்சி செய்யலாம். இல்லையென்றால் அது தேவையில்லை என்று மு.க ஸ்டாலின் சொல்லிவிட்டார்.” எனக் கூறினார்.

இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சபாநாயகர் அப்பாவுவின் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராவது, கூட்டணி முடிவு, பூத் கமிட்டி, இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை அமைப்புகளின் களப்பணி குறித்தும் விவாதிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார் கூறியதாவது:-

சபாநாயகர் அப்பாவு சொன்னதில் ஒரு சதவீதம் கூட உண்மை இல்லை. கம்பி கட்டும் கதை எல்லாம் சபாநாயகர் சொல்லி வருகிறார். சபாநாயகர் அப்பாவுக்கு அமைச்சர் ஆக வேண்டும் என்று ஆசை இருக்கிறது போல. அதனால், அவரை அமைச்சர் ஆக்கிவிட வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். அதற்காகத் தான் அவர் சட்டசபையில் பேசிக்கொண்டே இருக்கிறார்.” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை மனதார பாராட்டுகிறேன் என முதலமைச்சர் ஸ்டாலின் பேசியது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த ஜெயக்குமார், “பல்கலைக்கழக துணைவேந்தராக முதலமைச்சர் இருக்க வேண்டும் என்று அப்போது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சொன்ன போது ஏன் எதிர்த்தீர்கள்? ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுவது போல் உள்ளது. சட்டசபையில் பொதுக் கூட்டங்களில் தரக் குறைவாக பேசிவிட்டு இப்போது பாசாங்கு நடிப்பு காட்டுகிறார்கள்” எனத் தெரிவித்தார்.