சேரி மொழி என தலித் மக்களின் மொழியை தீண்டத்தகாத மொழியாக இழிவுபடுத்திய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் பாஜக நடிகையுமான குஷ்பு மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை போலீசில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி கார்த்திக் புகார் கொடுத்துள்ளார்.
நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்த சில கருத்துகள் பெரும் சர்ச்சையாக வெடித்தன. லியோ திரைப்படத்தை முன்வைத்து இந்த கருத்துகளை மன்சூர் அலிகான் தெரிவித்திருந்தார். மன்சூர் அலிகானின் கருத்துக்கு நடிகை த்ரிஷா கண்டனம் தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து திரைத்துறையினர் பலரும் மன்சூர் அலி கானுக்கு எதிரான கண்டனங்களைக் குவித்தனர். ஆனால் தாம் பேசியதில் தவறில்லை என மன்சூர் அலி கான் முதலில் விளக்கம் தந்திருந்தார். இந்த விவகாரத்தில் நடிகை குஷ்பு களமிறங்கி தமது எக்ஸ் பக்கத்தில் ஆக்ரோஷமாக பதிவிட்டார். பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்பு, தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராகவும் இருப்பதால் அதிகமாக ஆவேசப்பட்டார். இது தொடர்பான எக்ஸ் பதிவு ஒன்றில் ‘சேரி மொழி’ எனவும் குறிப்பிட்டிருந்தார். இது புதிய சர்ச்சையாக வெடித்தது.
சேரி என்பதும் சேரி மொழி என்பதும் இந்த மண்ணின் பூர்வகுடி மக்கள் வாழ்விடத்தையும் மொழியையும் குறிப்பிடுவது. அப்படியானால் தமிழ் மண்ணின் பூர்வகுடி மக்களின் மொழியை சேரி மொழி என கொச்சைப்படுத்துவதா? இழிவுபடுத்துவதா? என குஷ்புவுக்கு கண்டனங்கள் வெடித்தன. இந்த விவகாரத்தில் விளக்கம் தருவதாக மற்றொரு பதிவிட்ட நடிகை குஷ்பு சேரி என்றால் பிரெஞ்ச் மொழியில் அன்பு என குறிப்பிட இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துவிட்டது. நடிகை குஷ்புவுக்கு எதிராக காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் வரிந்து கட்டி நிற்கின்றன.
இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் சென்னை போலீசில் பாஜக நடிகை குஷ்புவுக்கு எதிராக புகார் கொடுத்துள்ளார். அதில், சேரி மொழி என தாழ்த்தப்பட்ட மக்களின் மொழியை இழிவுபடுத்தி, தீண்டத்தகாத மொழியாக கேவலப்படுத்தி உள்ளார். ஆகையால் பாஜக நடிகை குஷ்பு மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிகவின் கார்த்திக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.