டாஸ்மாக் வருமானத்தில் தான் அரசு செயல்படுவதாக கூறுவது தவறு: தமிழக அரசு விளக்கம்!

டாஸ்மாக் வருமானத்தில் தான் அரசு செயல்படுவதாகக் கூறுவது தவறு என தமிழக அரசுத்தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்ச்சிகளின் போது மதுபானம் வினியோகிக்கும் வகையில் சிறப்பு உரிமம் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து வழக்கறிஞர் சமூக நீதி பேரவை தலைவர் வழக்கறிஞர் கே.பாலு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், விளையாட்டு மைதானங்களில், போட்டிகள் நடக்கும் இடங்களில் மதுபானங்கள் வினியோகிக்கப்பட மாட்டாது என விளக்கமளித்தார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா, மது விலக்கு சட்டப்படி, பொது இடங்களில் மது அருந்துவது குற்றம் எனவும், விளையாட்டு மைதானங்கள், கருத்தரங்கு அரங்குகள் பொது இடங்கள் என்பதால் அங்கு மது பானம் வினியோகிக்க கூடாது என்று வாதிட்டார். அப்போது நீதிபதிகள், கருத்தரங்குகளில் மது வினியோகிக்க அனுமதித்தால், சாதி அமைப்புகள், அரசியல் கட்சிகள் மாநாடுகளிலும் மதுபானம் வினியோகிக்க கோருவர். இசை நிகழ்ச்சி நடத்துவதாக கூறி டிக்கெட் வழங்கினால் மதுபானம் இலவசம் என தெரிவித்தால் அது விற்பனையாகாதா? எனக் கேள்வி எழுப்பினர்.

அரசு தலைமை வழக்கறிஞர், மதுபானம் மூலம் கிடைக்கும் வருமானத்தின் மூலம் மட்டுமே அரசாங்கம் செயல்படுவதாகக் கூறுவது தவறு என்று விளக்கினார். இதையடுத்து, விளையாட்டு மைதானங்கள், கருத்தரங்கு அரங்குகள் பொது இடம் எனும் போது, சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்ச்சிகளின் போது மதுபானம் வினியோகிப்பது அரசின் சட்டத்துக்கு எதிரானது எனக் கூறி, இது சம்பந்தமாக விளக்கமளிக்க அரசு தலைமை வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், வழக்கு விசாரணையை டிசம்பர் 14 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.