முதல் அமைச்சர் மு.க .ஸ்டாலின் குறித்து அவதூறு கூறியதாக முன்னாள் டிஜிபி நட்ராஜ் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
முன்னாள் டிஜிபி நட்ராஜ், சமூக வலைதளங்களில் தமிழ்நாடு அரசு குறித்தும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்தும் தொடர்ந்து அவதூறு கருத்துக்களை தெரிவித்து வந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது. அவர் தனது வாட்ஸ் அப் குழுக்களிலும் திமுக குறித்தும், தமிழ்நாடு அரசு குறித்தும் அவதூறு கருத்துக்களைத் தெரிவித்து வந்ததாக தொடர்ந்து புகார்கள் எழுந்தது. இதையடுத்து நட்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரி, திருச்சி மத்திய மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ஷீலா, காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகார் மனுவில், “முன்னாள் காவல்துறை அதிகாரியும், அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நட்ராஜ், தமிழ்நாடு அரசு குறித்தும் முதலமைச்சர் குறித்தும் பல அவதூறான செய்திகளை சமூக வலைதளத்தில் பரப்பி வந்துள்ளார். மேலும், தமிழ்நாடு காவல்துறை பாதுகாப்பில், தமிழ்நாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் இடிக்கப்பட்டுள்ளதாகவும் பொய்யான கருத்தை கூறியுள்ளார். தமிழ்நாட்டில் சிறப்பாக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் திட்டமிட்டே அவர் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த வேண்டும், மதக்கலவரத்தை தூண்ட வேண்டும் என்கிற நோக்கில் இது போன்ற அவதூறு கருத்துக்களைப் பரப்பி வந்துள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடப்பட்டிருந்தது.
இந்நிலையில் முன்னாள் டிஜிபி நட்ராஜ் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.