வெளிநாட்டு அறிக்கைகளை நாம் ஏன் உண்மையாக எடுத்துக் கொள்ள வேண்டும், நாங்கள் அறிக்கையை நிராகரிக்கவில்லை. ஆதாரத்தை தான் கேட்கிறோம் என்று ஹிண்டன்பர்க் வழக்கில் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் இந்தியாவின் பிரபலமான தொழில் குழுமமான அதானி குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், அதானி குழுமம் பங்கு மோசடி உட்பட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. இந்தக் குற்றச்சாட்டை அடுத்து அதானி குழுமத்தின் பங்கு மதிப்பு கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது. இதனால், அதானி குழுமத்துக்கு கிட்டத்தட்ட ரூ.11 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. அதானி நிறுவனங்களில் முதலீடு செய்திருந்த மக்கள் பாதிப்பை எதிர்கொண்டனர். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யபப்ட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், நிபுணர் குழு ஒன்றை அமைத்தது. இந்தக் குழு அதானி குழுமத்திற்கு நற்சான்றிதழ் அளித்தது. இது தொடர்பாக செபியும் தனியாக விசாரணை நடத்தி கடந்த ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.
இதனிடையே, இது தொடர்பான வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷனிடம் சில காட்டமான கேள்விகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் எழுப்பினார். அதாவது, வெளிநாட்டு அறிக்கைகளை நாம் ஏன் உண்மை என ஏற்றுக்கொள்ள வேண்டும்? அந்த அறிக்கையை நாங்கள் நிராகரிக்கவில்லை. ஆனால் எங்களுக்கு ஆதாரம் தேவை. எனவே, அதானிக்கு எதிராக உங்களிடம் என்ன ஆதாரம் உள்ளது? ஒரு பப்லிகேஷனின் அறிக்கையை உண்மையாக எடுத்துக் கொள்ள முடியாது” என்றார்.