சீனாவின் மருத்துவமனைகளில் சுவாச பிரச்னைகள் மற்றும் காய்ச்சல் தொற்று அதிகரித்து வரும் சூழலை இந்திய அரசு கவனித்து வருவதாகவும், தேவையான அத்தியாவசிய முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருவதாகவும் மத்திய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
“அரசு சூழலைக் கவனித்து வருகிறது. மத்திய அரசின் மருத்துவ ஆய்வு நிறுவனமும் பொது மருத்துவ இயக்குனரகமும் சீனாவில் அதிகரித்து வரும் காய்ச்சல் குறித்து கவனித்து வருகின்றனர். அத்தியாவசிய நடவடிக்கைகலையும் மேற்கொண்டு வருகின்றோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டங்களை விளக்கும் ‘விக்சித் பாரத் சங்கல்ப்’ விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பங்கெடுத்த அமைச்சர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது இவ்வாறு கூறினார்.
கடந்த வெள்ளிக்கிழமை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இந்தத் தொற்றினால் உருவாகும் எந்தவிதமான அவசர நிலையையும் கையாளும் முனைப்போடு இந்தியா தயாராகி வருவதாகத் தெரிவித்திருந்தது. உலகம் முழுவதும் இதனால் பெரும் பதட்டம் உருவாகியிருந்தாலும் இந்தியாவிற்கு பாதிப்பு குறைவாகவே இருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சீனாவில் ‘ஹெச்9என்2’ பறவைக் காய்ச்சல் பரவலையும், வடக்கு சீனாவில் குழந்தைகளிடையே அதிகரித்து வரும் சுவாசப் பிரச்னைகள் குறித்தும் சீனா வழக்கதி்ற்கு மாறான தொற்றுகள் இல்லை எனக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.