கேரளாவில் கல்லூரி நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல்: 4 மாணவர்கள் பலி!

கேரளாவில் உள்ள கொச்சி அறிவியல் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கொச்சியில் கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (CUSAT) அமைந்துள்ளது. மிகவும் புகழ்பெற்ற இந்த பல்கலைக்கழகத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதனிடையே, நேற்று இரவு (சனிக்கிழமை) இந்த பல்கலைக்கழக வளாகத்தில் பிரபல பின்னணி பாடகி நிகிதா ஆனந்த் தலைமையில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்களாக கலந்து கொள்ள பாஸ்களும் வழங்கப்பட்டன. இதனால் பாஸ் பெற்றவர்கள் வளாகத்திற்கு உள்ளேயும், பாஸ் இல்லாதவர்கள் வாசலுக்கு வெளியேயும் நின்றிருந்தனர். இந்நிலையில், திடீரென அங்கு மழை பெய்ததால், வாசலுக்கு வெளியே நின்றிருந்த மாணவர்கள், மழையில் நனையாமல் இருப்பதற்காக வளாகத்திற்குள் நுழைந்தனர். இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சில மாணவர்கள் கீழே விழுந்தனர். அவர்களை மற்ற மாணவர்கள் வேறு வழியில்லாமல் மிதித்தபடி ஓடினர். இந்த கோர சம்பவத்தில் 2 மாணவிகள் உட்பட 4 மாணவர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர். 64 மாணவர்கள் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த மாணவர்கள் அங்குள்ள பல மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து அறிக்கை சமர்பிக்க கேரள மாநில உயர்கல்வி முதன்மைச் செயலாளர் மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு கேரள உயர்கல்வி அமைச்சர் ஆர்.பிந்து உத்தரவிட்டு உள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க சரியான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். இதற்காக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுப்போம். தொழில்நுட்ப திருவிழாக்களையும் பல்கலைக்கழக போட்டிகளையும் நடத்த பல்கலைக்கழகம் பயன்படுத்தும் வழக்கமான நடைமுறை இது. ஆனால், இதுபோன்ற ஒரு சோகமான சம்பவம் நடப்பது இதுவே முதல் முறை. எனவே இந்த விபத்துக்கான காரணங்களை கண்டறித்து எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தவிர்க்க முயற்சிப்போம். இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தரிடம் இது தொடர்பாக ஏற்கனவே உத்தரவிட்டு உள்ளேன், அவர்கள் அறிக்கைகளை சமர்ப்பித்த பிறகு விவரங்களைத் தெரிவிப்போம்.” என்றார்.

இதுகுறித்து, கேரள சட்ட அமைச்சர் பி ராஜீவ் தெரிவிக்கையில், “இது ஒரு அதிர்ச்சி தரும் சம்பவம். கேரளாவை சேர்ந்த மூன்று மாணவர்கள் உள்ளிட்ட 4 பேரை இழந்துள்ளோம். இதுபோன்ற சம்பவம் கேரளாவில் முதல் முறையாக நடக்கிறது. இது எதிர்பாராத ஒரு விஷயம். வார்டில் உள்ள அனைத்து நோயாளிகளையும் நாங்கள் சென்று பார்த்தோம். இரண்டு நோயாளிகள் ஐசியுவில் உள்ளனர். மற்றொரு மருத்துவமனை ஐசியுவில் இரண்டு மாணவர்கள் உள்ளனர். அவர்களுக்கு சிறந்த சிகிச்சையை அளிக்க முடிந்த உதவிகள் அனைத்தையும் நாங்கள் செய்கிறோம்.

இந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து உள்ளது. காவல்துறை தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகளை எடுத்து உள்ளது. சுகாதார அமைச்சர் நேரடியாக இறங்கி உள்ளார். மருத்துவக் கல்லூரிகள் மட்டுமன்றி தனியார் மருத்துவமனைகளிலும் அனைத்து சிகிச்சை வசதிகளையும் அவர் ஒருங்கிணைத்து வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த முடிவு செய்து உள்ளோம். அதே நேரத்தில் பல்கலைக்கழகம் ஏற்கனவே ஒரு முதற்கட்ட விசாரணை நடத்தியுள்ளது. அந்த விசாரணை அடிப்படையில் ஒரு முடிவுக்கு வரலாம்” என்றார்.