இது போன்று அறிக்கை விடுவது எடப்பாடி பழனிசாமியின் வாடிக்கைதான்: அமைச்சர் சிவசங்கர்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் பின்னால் மக்கள் திரள்வதால் ஏற்பட்ட வயிற்றெரிச்சலில் ஒரு எதிர்க் கட்சி தலைவராக இது போன்று அறிக்கை விடுவது எடப்பாடி பழனிசாமியின் வாடிக்கைதான் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் விமர்சித்துள்ளார்.

அரசுப்பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் மகளிரின் விவரங்கள் சேகரிக்கப்படுவதாக தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி விமர்சித்து இருந்தார். பெண்களிடம் பெயர், சாதி போன்ற 15 வகையான விவரங்களை கேட்டு நடத்துனர்கள் போக்குவரத்து துறை வழங்கிய படிவத்தை பூர்த்தி செய்ய திமுக அரசு உத்தரவிட்டு இருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி சாடியிருந்தார். இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகத்தான திட்டம் மகளிர் விடியல் பயணம். இத்திட்டத்தின் வெற்றியை பார்த்து, இதனை மற்ற மாநிலங்களும் செயல்படுத்துகின்றன. இந்த வெற்றியை பொறுக்க முடியாதவர்கள், இத்திட்டத்தை சிறுமைப்படுத்த பல முயற்சியை எடுத்தார்கள். இதற்காக கோவையில் ஒரு வயதான பெண்மணியை, ‘எனக்கு இலவச பயணம் வேண்டாம். டிக்கெட் கொடு’ என கேட்க வைத்து. அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு பார்த்தது எடப்பாடி டீம். இந்த நாடகத்தை பார்த்து பெண்கள் கட்டணமில்லா பயணத்தை புறக்கணித்து விடுவார்கள் என மனப்பால் குடித்தார்கள். இந்த பொய்யையும், புரட்டையும் புறந்தள்ளி தொடர்ந்து விடியல் பயணத்தை பயன்படுத்துகிறார்கள் தமிழ்நாட்டு பெண்கள். இதற்கு சாட்சி. இந்த திட்டம் தொடங்கியதிலிருந்து இன்று வரை தமிழ்நாட்டு பெண்கள் மேற்கொண்டிருக்கும் கட் டணமில்லா பயணம் 380 கோடியை தாண்டியிருப்பதே.

சாதிகளின் பெயரை சொல்லி அடக்குமுறை அமுக்கி வைக்கப்பட்டவர்களை, அந்த சாதியின் பெயராலேயே கைதூக்கி விடுவது தான் சமூகநீதி. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சொல்லி அனைவருமே வலியுறுத்தும் நேரத்தில், இத்தகைய குரலை எடப்பாடி பழனிசாமி எழுப்புவது என்ன காரணம்? கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, மகளிர் விடியல் பயணம், புதுமைப் பெண் திட்டம், முதல்வரின் காலை உணவு திட்டம் போன்ற திட்டங்களாலும், இன்ன பிற நலத்திட்டங்களாலும் தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பின்னால் மக்கள் திரள்வதால் ஏற்பட்ட வயிற்றெரிச்சலில் ஒரு எதிர்க்கட்சி தலைவராக இது போன்று அறிக்கை விடுவது எடப்பாடி பழனிசாமியின் வாடிக்கைதான். அதற்காக திராவிட இயக்கத்தின் அடிப்படைகளை மறந்து விடக்கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.