அமைச்சர் மனோ தங்கராஜுக்கு மானம், மரியாதை எல்லாம் இருக்கா: நாராயணன் திருப்பதி

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை ஒருமையில் விமர்சித்த அமைச்சர் மனோ தங்கராஜுக்கு பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.

அண்ணாமலைக்கும், தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜுக்கும் இடையேயான மோதல் என்பது இருவரும் ஒருவரையொருவர் ஒருமையில் திட்டிக்கொள்ளும் அளவுக்கு சென்றிருக்கிறது. தமிழகத்தில் பச்சை நிற ஆவின் பால் பாக்கெட்டுகளுக்கு பதிலாக ஊதா நிற பால் பாக்கெட்டுகளை விற்பனைக்கு கொண்டு வந்ததற்கு பின்னால் பெரிய மோசடி நடந்திருப்பதாக அண்ணாமலை குற்றம்சாட்டி இருந்தார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் மனோ தங்கராஜ், “வட மாநில பால் உற்பத்தி நிறுவனங்களை தமிழகத்தில் கொண்டு வருவதற்காக அண்ணாமலை கையூட்டு வாங்கிவிட்டு, இங்கு வந்து தவறான தகவல்களை வெளியிடுகிறார்” என குற்றம்சாட்டி இருந்தார். இதனால் கோபமடைந்த அண்ணாமலை, “அமைச்சர் மனோ தங்கராஜுக்கு 48 மணிநேரம் கெடு விதிக்கிறேன். அதற்குள் என் மீது அவர் வைத்த குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை வெளியிட வேண்டும். இல்லையெனில், அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்” என்றார்.

இதற்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மனோ தங்கராஜ், “48 மணிநேரத்துக்குள் ஆதாரத்தை வெளியிடாவிட்டால் தலையை சீவி விடுவாயா அண்ணாமலை. என்ன மிரட்டலா..” என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அமைச்சரின் இந்த பேச்சுக்கு பாஜக தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி இதற்கு காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “மன்னிப்பு கேட்காவிட்டால் என்ன.. தலையை சீவி விடுவாயா? மிரட்டலா? என்றெல்லாம் அண்ணாமலையை பார்த்து அமைச்சர் மனோ தங்கராஜ் கேட்டிருக்கிறார். அமைச்சரின் தலை குறித்து அண்ணாமலை பேசவில்லை. மானம், மரியாதை குறித்து தான் பேசினார் என்பது கூட தெரியாமல் பேசியிருக்கிறார் அமைச்சர். அது சரி. அவை எல்லாம் இருப்பவர்கள் தானே அதுகுறித்து கவலைப்படுவார்கள்” என நாராயணன் திருப்பதி கிண்டல் அடித்திருக்கிறார்.