குஷ்புவின் வீட்டுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!

‛சேரி’ மொழி என்ற வார்த்தையை பயன்படுத்திய நடிகை குஷ்பு மன்னிப்பு கோர வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று அவரது வீடு முற்றுகையிடப்பட்ட நிலையில் காவல் துறை பாதுகாப்பு தேவையா? என்பது குறித்து குஷ்பு பரபரப்பாக பேசியுள்ளார்.

நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு த்ரிஷா, தெலங்கானா அமைச்சர் ரோஜா, இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ், நடிகர் சிரஞ்சீவி உள்பட பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த விஷயத்தில் நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்புவும் கருத்து தெரிவித்து இருந்தார். இந்த விவகாரம் மகளிர் ஆணையத்துக்கு எடுத்து சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து ஒருவர், ‛‛ஏன் மகளிர் ஆணையம் மணிப்பூருக்கு வரவில்லை” என குஷ்புவிடம் கேள்வி எழுப்பினார். இதனால் கோபமடைந்த குஷ்பு, ‛‛உங்கள் சேரி மொழியில் என்னால் பேச முடியாது” என விமர்சனம் செய்தார். இது சர்ச்சையானது.

இந்நிலையில் தான் சேரி மொழி என கூறிய நடிகை குஷ்பு மன்னிப்பு கோர வேண்டும் என சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சியின் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்றும் காங்கிரஸ் கட்சியின் எஸ்சி பிரிவை சேர்ந்தவர்கள் நடிகை குஷ்புவின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் குஷ்புவின் போட்டோவுக்கு செருப்பு மாலை அணிவித்து துடைப்பத்தால் அடித்து எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் காங்கிரஸ் கட்சியினரின் போராட்டம் காரணமாக குஷ்புவின் வீட்டை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இதற்கிடையே தான் இன்று சென்னையில் குஷ்பு பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் காங்கிரஸ் கட்சியினர் நடத்தும் போராட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:-

தலித் மக்கள் பல வகைகளில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதை பற்றி பேசாமல் எதற்காக எனக்கு மட்டும் எதிராக போராடி வருகின்றனர்?. என் வீட்டு முன்பு அமர்ந்தால் அவர்களுக்கு பப்ளிசிட்டி கிடைக்கும். வேறு யாருடைய வீட்டின் முன்பு அமர்ந்தாலும் பப்ளிசிட்டி கிடைக்காது என்பதால் தான் இதனை செய்கின்றனர் என்றார்.

இந்த சமயத்தில் ‛‛காவல்துறையின் பாதுகாப்பு உங்களுக்கு தேவைப்படுகிறதா?” என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு குஷ்பு, ‛‛நான் காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்கவில்லை. ஒருவரின் வீட்டின் முன்பு போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டால் அங்கு போலீசார் பாதுகாப்பு அளிப்பார்கள். இது வழக்கமான நடைமுறை தான். அதன்படி என் வீட்டில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது” என்றார்.