சென்னையில் கனமழை: இரவோடு இரவாக களத்தில் இறங்கிய சென்னை மேயர் பிரியா!

சென்னையில் நேற்று இரவு 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், இரவோடு இரவாக சென்னை மாநகராட்சி துரிதமாகச் செயல்பட்டு, பெரும்பாலான இடங்களில் மழைநீரை அகற்றியது. மழையோடு மழையாக சென்னை மேயர் பிரியா, நேரடியாக களத்தில் இறங்கி, வடிகால் பணிகளை ஆய்வு செய்து, அதிகாரிகளை துரிதப்படுத்தினார்.

இலங்கையை ஒட்டியுள்ள பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெறக்கூடும், என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதன் காரணமாக டிசம்பர் 3ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் மழை கொட்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. அதன்படி, தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று (நவம்பர் 29) இரவு மழை கொட்டித் தீர்த்தது. இரவு 7 மணிக்கு தொடங்கிய மழை சுமார் 3 மணி நேரமாக விடாமல் பொழிந்தது.

சென்னை நகர் முழுவதும் மிக அதிகமாக மழை பெய்துள்ளது. மீனம்பாக்கம் 19 செ.மீ., கொளத்தூரில் 15 செ.மீ, அம்பத்தூரில் 14 செ.மீ., திருவிக நகரில் 13 செ.மீ, மலர் காலணியில் 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இன்னும் பல்வேறு பகுதிகளிலும் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் 10 செ.மீ.க்கும் அதிகமாக மழை பெய்திருக்கிறது. சென்னையில் பெய்த கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும், இரவு நேரத்தில் பெய்த கனமழையின் காரணமாக, பணி முடிந்து வீடு திரும்பும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். பல இடங்களில் இடைவிடாமல் கொட்டிய மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். மேலும், சென்னையில் உள்ள பல சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியதால், அந்தப் பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

கனமழையின் காரணமாக, சென்னையில் உள்ள 5 சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கியதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. அதிகமான நீர்தேங்கிய காரணத்தால், பெரம்பூர் ஹைவே சுரங்கப்பாதை, சைதாப்பேட்டை அரங்கநாதன் சுரங்கப்பாதைகள் மூட்டப்பட்டன. கனமழை காரணமாக, திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் மின்சார ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியதால், ரயில் சேவை பாதிக்கப்பட்டது. தொடர் மழையின் காரணமாக சிக்னல் பாதிப்பும் ஏற்பட்டது. இதனால், சென்னை-அரக்கோணம் மார்க்கத்தில் 10-க்கும் மேற்பட்ட ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு, தாமதமாக இயக்கப்பட்டன. சென்னை கடற்கரை – தாம்பரம் புறநகர் மின்சார ரயில் சேவையும் தாமதமானது. காலை வரை மழை விட்டு விட்டுப் பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில், சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று வியாழக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சென்னையில் அதிக மழை பாதிப்பு உள்ள பகுதிகளில் உதவி தேவைப்படுவோர் 1913 என்ற இலவச அவசர உதவி எண்ணை தொடர்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் மாநகராட்சி சார்பில் மழை நீர் தேங்காமல் இருக்க வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருந்தும் சில இடங்களில் மழைநீர் தேக்கம் காணப்பட்டால், அவசர உதவி எண்ணைத் தொடர்புகொண்டால் ராட்சத இயந்திரங்கள் மூலம் நீர் உறிஞ்சி அகற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, மழைநீர் தேங்கிய இடங்களில் மாநகராட்சி சார்பில் இயந்திரங்கள் மூலம் மழைநீர் அகற்றப்பட்டது.

மழை பாதித்துள்ள பகுதிகளில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் களத்திற்கே சென்று மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யுமாறும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார். அதன்படி, கொளத்தூர் பகுதியில் நேரில் சென்று ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு, இரண்டு மணிநேரம் மழை பெய்யாமல் இருந்தால் தேங்கியிருக்கும் நீர் முழுமையாக வடிந்துவிடும் என்று கூறினார். மேலும், மழைநீர் வடிவதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார். பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தொடர்பாக களத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தலைமையிடத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் (ICCC) கண்காணிக்கப்படுவதை மேயர் பிரியா ராஜன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ராதாகிருஷ்ணனும் உடன் இருந்தார். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட திரு.வி.க நகர் மண்டலம் ஓட்டேரி நல்லா கால்வாயில் மழைநீர் தங்குதடையின்றி செல்வதை மேயர் பிரியா ராஜன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திருவிக நகர் மண்டலம் ஜமாலியா நெடுஞ்சாலையில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணிகளை மேயர் பிரியா, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு மழைநீர் அகற்றும் பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சி பக்கிங்ஹாம் கால்வாயினை மேயர் பிரியா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பசுல்லா சாலையில் மோட்டர் பாம்புகள் மூலம் மழைநீரையினை வெளியேற்றம் பணியினை மேயர் நள்ளிரவில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து, கோடம்பாக்கம் மண்டலம், தியாகராய நகர். டாக்டர் நாயர் சாலையில் தேங்கியிருக்கும் மழைநீர் வெளியேற்றும் பணிகளின் நடவடிக்கைகளை இன்று அதிகாலை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மற்றொரு புறம், சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், மழை பாதிப்புகளை எதிர்கொள்ள அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு கமாண்டோ படையினரின் பணி ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். மாநகராட்சி அதிகாரிகள், ஆங்காங்கே ஆய்வில் ஈடுபட்டு பணிகளை துரிதப்படுத்தினர். மழை விட்ட சில மணி நேரத்தில், பெரும்பாலான இடங்களில் மழைநீர் வடிந்தது. மழை சற்று ஓய்ந்ததுமே, மயிலாப்பூர், மந்தைவெளி மற்றும் ராயபுரம் பகுதியில், சாலைகளில் தேங்கியிருந்த மழைநீர் வடிந்து போக்குவரத்து சீரானது.