இபிஎஸ் மீதான டெண்டர் முறைகேடு: அமர்வு குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி முடிவு செய்வார்!

முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு எதிரான ரூ.4,800 கோடி மதிப்பிலான டெண்டர் முறைகேடு வழக்கு விசாரணையை எந்த அமர்வு விசாரிப்பது என்பது குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி முடிவு செய்வார் என தெரிவித்துள்ள நீதிபதிகள், விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத் துறையில் ரூ. 4,800 மதிப்பிலான டெண்டரை முன்னாள் முதல்வர் பழனிசாமி தனது உறவினர்கள் மற்றும் பினாமிகளின் நிறுவனங்களுக்கு முறைகேடாக வழங்கியதாகக் கூறி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2018-ல் வழக்கு தொடர்ந்திருந்தார். இதை விசாரித்த உயர் நீதிமன்றம் இதுதொடர்பாக சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், இந்த வழக்கை மீண்டும் சென்னை உயர் நீதிமன்றமே விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து தமிழக லஞ்சஒழிப்புத் துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு கடந்தமுறை நீதிபதிகள் அனிருத்தா போஸ், பேலா எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. ஆனால் தற்போது நீதிபதிகள் பேலா எம்.திரிவேதி, சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக லஞ்சஒழிப்பு துறை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, முன்னாள் முதல்வர் இபிஎஸ்-க்கு எதிரான இந்த வழக்கு ஏற்கெனவே 3 முறை நீதிபதி அனிருத்தா போஸ் முன்பாக விசாரணைக்கு வந்தது. இன்று (நேற்று) விரிவான இறுதி விசாரணை தொடங்கும் என கடந்தமுறை நீதிபதி அனிருத்தா போஸ் அறிவித்திருந்தார். ஆனால் திடீரென இந்த வழக்கு வேறு ஒரு அமர்வில் பட்டியலிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே நீதிபதி அனிருத்தா போஸ் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்து வரும் நிலையில் விசாரணையை வேறு அமர்வுக்கு மாற்றக்கூடாது என உச்ச நீதிமன்ற பதிவாளருக்கு கடிதம் கொடுத்துள்ளோம். இந்த விவகாரத்தில் வழக்குகளை பட்டியலிடும் பதிவாளரின் செயல்பாடு அதிருப்தியளிக்கிறது என வாதிட்டார்.

அதையடுத்து நீதிபதிகள், இந்த டெண்டர் முறைகேடு வழக்கை எந்த அமர்வு விசாரிக்க வேண்டும் என்பதை தலைமை நீதிபதி முடிவு செய்வார் என தெரிவித்ததுடன், இதுதொடர்பாக தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் முன்பாக முறையிட இருதரப்புக்கும் அறிவுறுத்தி விசாரணையை தள்ளிவைத்தனர்.