காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக்குக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி என்.ஐ.ஏ. நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்ததாகவும் இந்திய அரசுக்கு எதிராக காஷ்மீர் மக்களை யாசின் தூண்டிவிட்டதாகவும் யாசின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டி குற்றச்சாட்டில் காஷ்மீர் பிரிவினைவாத தலைவன் யாசின் மாலிக்கை தேசிய புலனாய்வு அமைப்பு கடந்த 2019-ம் ஆண்டு கைது செய்தது. திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள யாசின் மாலிக் மீது பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டியதாக தொடரப்பட்ட வழக்கு டெல்லியில் உள்ள என்ஐஏ சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் யாசின் மாலிக் குற்றவாளி என என்ஐஏ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது. குற்றவாளி யாசின் மாலிக்கிற்கு நேற்று தண்டனை அறிவிக்கப்பட்டது. அதன்படி பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டிய குற்றச்சாட்டு உறுதியான நிலையில் குற்றவாளி யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு வழங்கியுள்ளது.
இந்த நிலையில், நான் காந்திய கொள்கைகளை பின்பற்றி வருகிறேன் என்று காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக் தெரிவித்துள்ளார். தீர்ப்பு வெளியாவதற்கு முன்பு இந்த கருத்தை அவர் தெரிவித்துள்ளார். எதற்கும் பிச்சை எடுக்க மாட்டேன். வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. நீதிமன்றமே இதில் முடிவெடுக்கட்டும் என்றும் யாசின் மாலிக் தெரிவித்துள்ளார்.
“28 வருடங்களாக நான் ஏதேனும் தீவிரவாதச் செயல் அல்லது வன்முறையில் ஈடுபட்டிருந்தால், இந்திய உளவுத்துறை அதனை நிரூபித்தால், நாம் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன். தூக்கு தண்டனையை ஏற்றுக்கொள்கிறேன் என்று யாசின் மாலிக் கூறியதாக நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.