பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் நடைபெற்ற பேரணியில் வன்முறை ஏற்பட்டதால் காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர்.
பாகிஸ்தானில் உடனடியாக பொதுத் தேர்தல் நடத்த வலியுறுத்தி நேற்று பிரம்மாண்ட பேரணிக்கு முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அழைப்பு விடுத்து இருந்தார். இதில் பொது மக்களும் கட்சி ஆதரவாளர்களும் பங்கேற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இந்த நிலையில் பேரணிக்கு அனுமதி மறுத்த பாகிஸ்தான் பிரதமர், பேரணியில் பங்கேற்றால் கைது செய்ய நேரிடும் என்று இம்ரான் கானுக்கு எச்சரிக்கை விடுத்தார். பேரணிக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தாலும் இம்ரான் கான் ஆதரவாளர்கள் ஏராளமானோர் இஸ்லாமாபாத்தில் குவிந்தனர்.
இம்ரான் கான் ஹெலிகாப்டர் மூலம் போராட்டக்களத்திற்கு வந்தார். பேரணிக்கு அனுமதி இல்லை என்பதால் அனைவரையும் கலைந்து போகும்படி காவல்துறையினர் உத்தரவிட்டனர். அப்போது காவல் துறையினர் மீது போராட்டக்காரர்கள் சரமாரியாக கற்கள் மற்றும் பாட்டில்களை வீசினர். இதையடுத்து கூட்டத்தை கலைக்க கண்ணீர் புகைக்குண்டுகளை வீசப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. கண்ணீர் புகைக்குண்டுகள் வீசியும் தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை பாதுகாப்புப் படையினர் விரட்டி அடித்தனர்.
இம்ரான் கான் ஆதரவாளர்களின் கல்வீச்சில் காவல்துறையினர் 12 பேர் படுகாயம் அடைந்ததாக இஸ்லாமாபாத் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆதரவாளர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள இம்ரான் கான், அமைதியான பேரணிக்கு காவலர்கள் புகுந்து வன்முறைகளமாக மாற்றிவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.