பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி மீது மேலும் ஒரு ஊழல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான், பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சித் தலைவராக உள்ளார். 71 வயதான இம்ரான் கான், 2018 முதல் ஏப்ரல் 2022, வரையிலான காலகட்டத்தில் பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்தார். இந்தநிலையில், 2022ஆம் ஆண்டு, ஏப்ரலில், இம்ரான் கானின் கட்சி பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வியைச் சந்தித்து ஆட்சி கலைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பதவி விலகிய அவர் மீது இதுவரை 150க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்தநிலையில், இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது, பரிசுப்பொருள் முறைகேடு, அல்-காதிர் அறக்கட்டளை முறைகேடு மற்றும் பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசியவிட்ட சிபர் வழக்கு ஆகிய வழக்குகளில், கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி மீது மேலும் ஒரு ஊழல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.50 மில்லியன் தொகை ஊழல் முறைகேடு புகாரில், இம்ரான் கான், அவரது மனைவி புஷ்ரா பீபி, இம்ரான் கான் மனைவியின் தோழி ஃபர்ஹத் ஷாஜாதி மற்றும் இம்ரான் கான் கட்சியின் முக்கிய தலைவர் சுல்பி புகாரி உள்பட மொத்தம் 8 பேர் மீது, இன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அல்-காதிர் அறக்கட்டளை முறைகேடு வழக்கில், கடந்த நவ. 27 அன்று நடைபெற்ற விசாரணையில், இம்ரான் கானை 2 வார நீதிமன்றக் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், ராவல்பிண்டியிலுள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கானிடம், அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.