‘இந்தியா’ கூட்டணி பிரதமர் வேட்பாளர் குறித்து 5 மாநில தேர்தல் முடிவுக்கு பின் தலைவர்கள் கூடி முடிவு செய்வார்கள் என்று கனிமொழி எம்பி கூறியுள்ளார்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. 2014, 2019 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தலில பாஜக வெற்றி பெற்றுள்ளது. பிரதமராக நரேந்திர மோடி 10 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளார். இந்நிலையில் தான் வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைக்க பாஜக முயன்று வருகிறது. இதற்கான பணிகளை பாஜக தீவிரமாக தொடங்கிவிட்டது. அதேவேளையில் பாஜகவை வரும் நாடாளுமன்ற தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் உறுதியாக உள்ளன. அதோடு பாஜகவுக்கு எதிராக தனித்தனியாக களமிறங்கினால் தேர்தலில் வெல்வது கடினம் என்பதையும் எதிர்க்கட்சிகள் புரிந்து வைத்துள்ளன. இதனால் வரும் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிடுகின்றனர். இதற்காக 26 எதிர்க்கட்சிகள் இணைந்து ‛இந்தியா’ என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன. இதில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ், ஆம்ஆத்மி, சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதாதளம், ஐக்கிய ஜனதாதளம் உள்பட மொத்தம் 26 கட்சிகள் இணைந்துள்ளன. இந்த கூட்டணியின் 3 ஆலோசனை கூட்டங்கள் நடந்து முடிந்துள்ளன.
இந்த கூட்டணியில் மாநில வாரியாக தொகுதி பங்கீடு செய்வதற்கு, பிரசாரம் செய்வது உள்பட ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு கட்சிளின் முக்கிய தலைவர்கள் உள்ளனர். இருப்பினும் இந்த எதிர்க்கட்சிகளின் ‛இந்தியா’ கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. பல கட்சிகள் இந்த கூட்டணியில் உள்ளதோடு, மூத்த தலைவர்கள் பலர் அங்கம் வகிக்கின்றனர். இதனால் பிரதமர் வேட்பாளர் தேர்வு என்பது கடினமாக இருக்கும் என கருதப்படுகிறது.
இந்நிலையில் தான் ‛இந்தியா’ கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் தேர்வு எப்போது? நடக்கும் என்பது பற்றி கனிமொழி எம்பி முக்கிய விஷயத்தை தெரிவித்துள்ளார். அதாவது முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக மண்டல அளவிலான 2ம் கட்ட விநாடி- வினா போட்டிகள் விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டையில் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு திமுக எம்பி கனிமொழி பரிசுள் வழங்கி பாராட்டினார். பின்னர் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:-
மத்திய பாஜக அரசு வருமான வரித் துறை, சிபிஐ, அமலாக்கத் துறை ஆகிய மூன்றையும் தன்னை எதிர்க்கக் கூடியவர்கள் மீது பயன்படுத்துகிறது. திமுகவை மிரட்டி விடலாம் என்ற எண்ணத்தில் பாஜகவினர் செயல்படுகிறார்கள். 5 மாநில தேர்தல் முடிவுகள் ‘இந்தியா’ கூட்டணிக்கும் நாட்டுக்கும், நம்பிக்கையை தரக்கூடிய முடிவாக அமையும். ‘இந்தியா’ கூட்டணி பிரதமர் வேட்பாளர் குறித்து 5 மாநில தேர்தல் முடிவுக்கு பின் தலைவர்கள் கூடி முடிவு செய்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.