இந்தியாவுக்கு அமலாக்கத்துறை என்ற ஒரு இயக்கமே தேவை கிடையாது: கார்த்தி சிதம்பரம்!

ஊழல்வாதிகளால் நிறைந்து காணப்படும் அமலாக்கத்துறையை இழுத்து மூட வேண்டும் என்றும், இந்தியாவுக்கு அமலாக்கத்துறை என்ற ஒரு இயக்கம் தேவை கிடையாது எனவும் நாடாளுமன்ற எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் டாக்டர் சுரேஷ் பாபு. இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, அமலாக்கத்துறை 2018 இல் வழக்குப் பதிவு செய்திருந்தது. இந்த நிலையில், டாக்டர் சுரேஷ் பாபுவிடம் இந்த வழக்கில் இருந்து அவரை விடுவிப்பதற்கு ரூ.3 கோடி லஞ்சம் தருமாறு மதுரை அமலாக்கத்துறை அதிகாரியான அங்கித் திவாரி பேரம் பேசியுள்ளார். திண்டுக்கல் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை அமலாக்கத்துறையைச் சேர்ந்த அதிகாரி அங்கித் திவாரி 20 லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுள்ளார். இது குறித்து மருத்துவர் ஏற்கனவே அளித்த புகாரின் பேரில் தகவலறிந்து அங்கு வந்த திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி தலைமையிலான காவல் துறையினர் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் காரிலிருந்து 20 லட்சம் ரூபாய் லஞ்ச பணத்தைக் கைப்பற்றி, அவரையும் கைது செய்தனர்.

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி பிடிபட்டதை அடுத்து, மதுரை அமலாக்கத்துறை அலுவலகம் மற்றும் அங்கித் திவாரியின் வீடு உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் விடிய விடிய சோதனை நடைபெற்றது. அங்கித் திவாரி கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், ஊழல்வாதிகளால் நிறைந்து காணப்படும் அமலாக்கத்துறையை இழுத்து மூட வேண்டும் என்றும் இந்தியாவுக்கு அமலாக்கத்துறை என்ற ஒரு இயக்கம் தேவை கிடையாது என நாடாளுமன்ற எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கார்த்தி சிதம்பரம் கூறியதாவது:-

முழுக்க முழுக்க ஊழல் அதிகாரிகளால் இருக்கும் ஒரு இயக்கம் தான் இந்த அமலாக்கத்துறை. அவர்களுக்கு என்று ஒரு காடர் கூட கிடையாது. நீங்கள் உள்ளே விசாரித்து பார்த்தீர்கள் என்றால், பெரும் பணம் கொடுத்து தான் பல பேர் அமலாக்கத்துறையிலே வேலையில் சேருவார்கள். இதனால் அவர்கள் லஞ்சம் கொடுத்து தான் அந்த வேலைக்கே போகிறார்கள். இதனால் அவர்கள் லஞ்சம் வாங்கி தான் அந்த முதலீட்டை திருப்புவதற்காக இந்த செயல்களில் ஈடுபடுகிறார்கள். இந்த அங்கித் திவாரியை போல தான் அங்கே நூற்றுக்கணக்கான அதிகாரிகள் இருக்கிறார்கள். மீண்டும் மீண்டும் சொல்கிறேன் இந்த அமலாக்கத்துறையை இழுத்து மூட வேண்டும். சிபிஐ ஒரு நல்ல இயக்கம். சிபிஐயில் எக்கனாமிக் அபென்சியஸ் விங் என்ற ஒரு அமைப்பு இருக்கிறது. அந்த விங்கே இந்த வேலையை நன்றாக செய்யும். இந்தியாவுக்கு அமலாக்கத்துறை என்ற ஒரு இயக்கமே தேவை கிடையாது. இவ்வாறு கார்த்தி சிதம்பரம் கூறினார்.