இந்தியா கூட்டணியில் சேர்த்ததுக்கு சனாதனம் குறித்து பிளான் செய்து பேசியே காங்கிரஸ் ஆட்சியை ஒழிச்சிக்கட்டிடீங்க என பாஜக மூத்த தலைவர் கே.டி.ராகவன் திமுகவை கிண்டலாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் கே.டி.ராகவன் எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
உங்கள I.N.D.I.A கூட்டணியில் சேர்த்ததுக்கு ஐந்து மாநில தேர்தல் நடக்க இருக்கிற சமயத்துல பிளான் பன்னி “சனாதனத்தை ஒழிப்போம்” னு சொல்லி சொல்லியே காங்கிரஸ் ஆட்சியையே ஒழிச்சிக்கட்டிடீங்க! திமுகவுக்கு பாராட்டுகள்! என தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகிறது. அதில் மிசோரம் வாக்கு எண்ணிக்கை மட்டும் நாளைய தினத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேற்கண்ட 4 மாநிலங்களில் தெலுங்கானாவில் கே சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. அது போல் மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி இருந்தது. இந்த நிலையில் தற்போது 4 மாநில தேர்தல்களில் தெலுங்கானாவில் மட்டும் காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது. மற்ற 3 மாநிலங்களிலும் காங்கிரஸ் வெல்லவில்லை. காங்கிரஸ் கட்சித் தலைவரான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் சத்தீஸ்கரில் பிரச்சாரம் செய்தனர். ஆனாலும் அங்கு அக்கட்சி தோல்வியையே சந்தித்தது. பல்வேற விவகாரங்களில் மோடி எதிர்ப்பு அலையை ராகுல் காந்தி வெளிப்படுத்திய நிலையிலும் அவருக்கு வெற்றியை பெற்று தரவில்லை.
வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக ஆட்சி அமைப்பதை தடுக்க எதிர்க்கட்சிகள் இணைந்து “இந்தியா” எனும் கூட்டணியை உருவாக்கின. இந்தியாவில் “இந்தியா” வெல்லும் என்று முழக்கங்களும் எழுப்பப்பட்டன. இந்த 4 மாநிலங்களின் தேர்தல் தற்போது காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளன. அந்த கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கும் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில்தான் 4 மாநிலங்களில் 3 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு காரணம் திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய சனாதன எதிர்ப்பு பேச்சுதான் என காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளும் அரசியல் நிபுணர்களும் தெரிவித்து வருகிறார்கள்.