ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜகவுக்கு கிடைத்த வெற்றியானது, பிரதமர் மோடி மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது என மத்திய இணையமைச்சர் எல். முருகன் கூறினார்.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய 4 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் கிட்டத்தட்ட வெளியாகி விட்டன. அந்த வகையில், தெலங்கானாவை தவிர மற்ற 3 இந்தி பேசும் மாநிலங்களில் பாஜக அதிரடியாக ஆட்சி அமைக்கிறது. இதில் மத்திய பிரதேசத்தில் தொடர்ந்து 5-வது முறையாக பாஜக ஆட்சி அமையவுள்ளது. சில தினங்களுக்கு முன்பு வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் இந்த 3 மாநிலங்களிலும் காங்கிரஸுக்கே வெற்றி வாய்ப்பு கூறப்பட்ட நிலையில், அதனை பாஜகவின் வெற்றி பொய்யாக்கி உள்ளது. இந்த தேர்தல் வெற்றிகளால் பாஜகவினர் உற்சாகத்தில் உள்ளனர். வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்பட்ட தேர்தல்கள் இவை என்பதால், நாடு முழுவதும் பாஜகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த தேர்தல் வெற்றி குறித்து மத்திய அமைச்சர் எல். முருகனிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது:-
இந்த 4 மாநிலத் தேர்தல் முடிவுகள் என்பதை முழுக்க முழுக்க நமது பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கிறேன். மோடியின் வளர்ச்சி அரசியலுக்கு கிடைத்த வெற்றி. மோடி மீது எந்த அளவுக்கு மக்கள் பாசத்தை வைத்திருக்கிறார்கள் என்பதற்கு இந்த தேர்தல் முடிவுதான் சரியான சான்று. அதிலும், மத்திய பிரதேசத்தில் 5 முறை தொடர்ந்து பாஜக ஆட்சி அமைக்கப் போகிறது என்பது இந்திய அரசியலில் ஒரு வரலாற்று சாதனை. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி பிரதமர் மோடி 3-வது முறையாக ஆட்சிக்கு வருவதற்கான சமிக்ஞை தான் இது. காங்கிரஸும், இண்டியா கூட்டணியும் மக்களுக்கு தேவையில்லாத ஒன்று என நிரூபணம் ஆகிவிட்டது. இது அவர்களுக்கு கிடைத்த சம்மட்டி அடி. இவ்வாறு எல். முருகன் கூறினார்.