கருணாநிதிக்கு விழா நடத்த வேறு தேதியே இல்லையா?: டாக்டர் சரவணன்

கருணாநிதிக்கு விழா நடத்த டிச.24ஆம் தேதியை தவிர வேறு தேதியே இல்லையா என அதிமுக மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் கூறியுள்ளார்.

இது குறித்து மதுரை டாக்டர் சரவணன் கூறியிருப்பதாவது:-

இந்திய துணைக்கண்டத்திலே சினிமா துறையில் பல வெற்றி கண்டது மட்டுமல்லாது, ஒரு மனிதன் எப்படி ஒழுக்கத்துடன் வாழ வேண்டும் என்பதனை தனது திரைப்படங்கள் மூலம் மக்களுக்கு விளக்கியவர் எம்ஜிஆர். சினிமா துறையை சார்ந்த அனைவருக்கும் பாரபட்சம் இல்லாமல் உதவிகளை வாரி வழங்கியதோடு மட்டுமல்லாது கலைத்துறையை சேர்ந்தவர்களுக்கு பல்வேறு அரசு பதவிகள், விருதுகள் என வழங்கி கௌரவப்படுத்தியவர் புரட்சித்தலைவர். மேலும் 11 ஆண்டுகாலம் முதலமைச்சராக இருந்து மக்களுக்காகவே தன்னையே அர்ப்பணித்து வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர். காலங்கள் கடந்தாலும் மக்களின் மனதில் புரட்சித் தலைவர் தெய்வமாக வாழ்ந்து வருகிறார். ஆண்டுதோறும் டிசம்பர் 24ஆம் தேதி எந்த மக்களும் மறக்க முடியாது ஏனென்றால் அன்று தான் நம்மை விட்டு புரட்சித்தலைவர் சென்றார். அப்படிப்பட்ட புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நினைவு நாள் வருகின்ற டிசம்பர் 24 ஆம் தேதி வருகிறது.

அன்றைய தினம் கருணாநிதி 100 என்று பிரம்மாண்டமான விழாவை திரையுலகம் சேப்பாக்கத்தில் நடத்துகிறது. இதில் பல்வேறு மாநிலங்கள் சேர்ந்த சினிமா துறையை சார்ந்தவர்கள் பங்கேற்க உள்ளதாக செய்திகள் வருகிறது. விழாக்களை நீங்கள் நடத்த வேண்டாம் என்று யாரும் கூறவில்லை, ஆனால் புரட்சித்தலைவர் நினைவு நாளில் நடத்துவது தான் தமிழக மக்களுக்கு வேதனையாக உள்ளது. ஏனென்றால் நானும் சில படங்களில் நடித்து நடிகர் சங்கத்தில் உறுப்பினராக கூட உள்ளேன் இதைக் கூற எனக்கு தார்மீக உரிமை உள்ளது. மேலும் திரை உலகத்தைச் சார்ந்த நடிகர் விஜயகாந்த் தற்போது மருத்துவமனையில் உள்ளார். இந்த நேரத்தில் இது தேவையா என சில சினிமாதுறை சார்ந்தவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். கருணாநிதி நூற்றாண்டு விழாவை, புரட்சித்தலைவர் மறைந்த நாளில் நடத்தாமல் வேறொரு தேதியை நடத்த திரையுலகம் பரிசீலக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.