தெலுங்கானாவில் குடும்ப ஆதிக்கத்தால் ராவ் கட்சி தோற்றது என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளதாவது:-
நான்கு மாநில தேர்தலில், இரு பெரிய மாநிலத்தில் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது. தெலுங்கானாவில் ஆளுங்கட்சி ஏன் தோற்றது என்பது அனைவருக்கும் தெரியும். முதல்வர் சந்திரசேகர ராவின் ஊழல், குடும்ப அரசியல் ஆதிக்கத்தால், மக்கள் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். சனாதனத்தை யாரும் ஒடுக்கவும் முடியாது; அழிக்கவும் முடியாது. சனாதனம் என்பது, நல்ல பழக்க வழக்கங்களை நாம் ஏற்று கொள்வது தான்.
இரண்டரை ஆண்டுகள் ஆண்ட பின், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத, மக்களை ஏமாற்றும் அரசாக, தமிழக அரசு செயல்படுகிறது. மகளிருக்கு, 1,000 ரூபாய் வழங்குவதில் பாகுபாடு உள்ளது. வரிச்சுமையை மக்களின் தலையில் ஏற்றியுள்ளனர். விவசாயிகளுக்கு அநீதி இழைத்துள்ளனர். இதன் தாக்கம் வரும் லோக்சபா தேர்தலில் எதிர்மறை ஓட்டுகள் வாயிலாக தெரியும். அ.தி.மு.க., – பா.ஜ., கட்சிகளின் அன்பு, நட்பு பெற்ற கட்சியாக த.மா.கா., செயல்படும். தேர்தல் நேரத்தில் எங்களின் முடிவை அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.