மீட்புப் பணிகளை நேரடியாக கண்காணித்து வருகிறேன்: முதல்வர் ஸ்டாலின்!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும், மீட்புப் பணிகள் அனைத்தையும் நானே நேரடியாகக் கண்காணித்து வருகின்றேன். இந்த இக்கட்டான காலகட்டத்தில் அனைவரும் இணைந்து பணியாற்றி இந்த இயற்கை இடர்ச்சூழலை வென்று வருவோம், என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அனைத்து இடங்களிலும் நீர் வடிந்து, இயல்பு நிலை திரும்ப மேலும் சில காலம் தேவைப்பட்டாலும், அதற்கான முயற்சிகளை உடனடியாக மேற்கொள்ள வெளிமாவட்டங்களில் இருந்து வந்திருக்கும் பணியாளர்கள், அனைத்து அரசு உயர் அலுவலர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அனைவருக்கும் உத்தரவிட்டுள்ளேன். இந்தப் பணிகள் அனைத்தையும் நானே நேரடியாகக் கண்காணித்து வருகின்றேன். இந்த இக்கட்டான காலகட்டத்தில் அனைவரும் இணைந்து பணியாற்றி இந்த இயற்கை இடர்ச்சூழலை வென்று வருவோம்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சூளை கண்ணப்பர் திடலில் உள்ள சமுதாய நலக் கூடத்தில் ஆய்வு செய்தார். அங்கு தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, பாய், போர்வை ஆகியவற்றை வழங்கி, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து தரும் என்று உறுதியளித்தார். யானைகவுனியில் உள்ள சென்னை உயர்நிலைப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து, வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்து, தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், கல்யாணபுரம் பகுதி மக்களை சந்தித்து, வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்த முதல்வர் அங்குள்ள சிறப்பு மருத்துவ முகாமை பார்வையிட்டு, அங்குள்ள மருத்துவர்களிடம் மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரம் குறித்து கேட்டறிந்தார்.