தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் புதுச்சேரியில் மிக்ஜாம் புயல் பாதிப்பால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்குப் பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
வங்க கடலில் மையம் கொண்ட மிக்ஜாம் புயல் தமிழ்நாட்டின் சென்னை அருகே 30 மணி நேரம் நிலை கொண்டு மெதுவாக நகர்ந்தது. இதனால் சென்னை மாநகர், புறநகர்களில் 2 நாட்கள் இடைவிடாமல் மழை கொட்டித் தீர்த்தது. 47 ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னையில் பெரும் மழை கொட்டியது. இந்தப் பெருமழையால் சென்னை மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளத்தில் தத்தளித்தன. தற்போதும் வெள்ளம் பாதித்த இடங்களில் போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு அமைச்சர்கள் மேற்பார்வையில் மீட்பு, நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மிக்ஜாம் புயலானது ஆந்திரா மாநிலம் நெல்லூர்- மச்சிலிப்பட்டணம் இடையே பாபட்லா அருகே கரையை கடந்தது. தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயலால் 17 பேர் பலியாகினர். ஆந்திரா, புதுச்சேரியிலும் கடும் பாதிப்பை மிக்ஜாம் புயல் ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே மிக்ஜாம் புயலால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், புயலில் காயமடைந்தவர்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரதமர் மோடி பிரார்த்தனை செய்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அதிகாரிகள் களத்தில் அயராது பணியாற்றி வருவதாகவும், நிலைமை முழுமையாக இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை தங்கள் பணிகளைத் தொடர்வார்கள் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
எக்ஸ் பதிவில், பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் புதுச்சேரியில் மிச்சாங் புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளன. இந்தப் புயலால் காயமடைந்தவர்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பிரார்த்தனைகள் செய்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அதிகாரிகள் களத்தில் அயராது பணியாற்றி வருகின்றனர், நிலைமை முழுமையாக இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை அவர்கள் தங்கள் பணிகளைத் தொடர்வார்கள். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.