உலகின் 5-வது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளது : நிர்மலா சீதாராமன்!

உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் இன்று(டிச.7) விவாத நேரத்தின்போது எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-

இரண்டாம் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி கணிசமாக உயர்ந்துள்ளது. உலகிலேயே மிகப்பெரிய வளர்ச்சியாகவும் இது பதிவாகியுள்ளது. மேலும், வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் என்ற நிலையை, தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டு வருகிறோம். 2014 ஆம் ஆண்டில் 10-வது இடத்தில் இருந்த இந்தியப் பொருளாதாரம், கடந்த 8 ஆண்டுகளில் உலகின் 5-வது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(ஜிடிபி) வளர்ச்சிக்கு, அனைத்து துறைகளும் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளன.

மேக் இன் இந்தியா முன்னெடுப்பு உள்பட அரசு எடுத்த நடவடிக்கைகளால் உற்பத்தித் துறையும் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருகிறது. உலகில் இரண்டாவது அதிகமாக நாடப்படும் தயாரிப்புத் தளமாக இந்தியா விளங்கி வருகிறது. 2017-18 காலகட்டத்தில், 17 சதவிகிதமாக நிலவிய வேலையில்லா திண்டாட்டம், 10 சதவிகிதமாக குறைந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில், 13.50 கோடி மக்கள் பன்முனை வறுமையிலிருந்து மீண்டு வந்துள்ளனர்.

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த அரசு சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த ஆண்டு ஏப்ரலில், நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையிலான சில்லறை பணவீக்கம், 7.8 சதவிகிதமாக உயர்ந்தது. ஆனால், தற்போது ரிசர்வ் வங்கியின் இலக்கான 4 சதவிகிதத்தையொட்டி சில்லறை பணவீக்கம் நெருங்கியுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.