பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியானது இந்தியாவுடையது என்பதில் மாற்றம் இல்லை என்று பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடையது என்றும், 2026-ம் ஆண்டுக்குள் அந்த பகுதிகள் இந்தியாவுடன் இணைக்கப்படும் என்றும் கூறி இருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்திருந்த பாகிஸ்தான், அவை தங்கள் நாட்டுக்கு சொந்தமானவை என தெரிவித்திருந்தது.
இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சியிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அரிந்தம் பக்சி, ”பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் விஷயத்தில் நமது நிலைப்பாடு குறித்து நான் வலியுறுத்துவது அவசியம் என்று நான் நினைக்கவில்லை. நாடாளுமன்றத்தில் நமது உள்துறை அமைச்சர் பேசியதை நான் விளக்க வேண்டிய தேவை இல்லை. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்த நமது நிலைப்பாடு தெளிவானது. அதில் மாற்றத்துக்கு எந்த தேவையும் இல்லை” என தெரிவித்தார்.
கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்தியர்களின் நிலை குறித்த கேள்விக்குப் பதில் அளித்த அரிந்தம் பக்சி, ”அங்கு இரண்டு மேல்முறையீடுகள் உள்ளன. ஒன்று குடும்பத்தினர் மூலம் மேற்கொள்ளக்கூடிய மேல் முறையீடு. இரண்டாவது, கைதிகள் மூலம் மேற்கொள்ளக்கூடிய மேல்முறையீடு. இந்த வழக்கில் 2 முறை விசாரணை நடத்தப்பட்டுள்ளது. நாங்கள் இந்த விஷயத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அனைத்து சட்ட மற்றும் தூதரக உதவிகளையும் வழங்குகிறோம். கடந்த 3 ஆம் தேதி அவர்கள் 8 பேரையும் சிறையில் சந்திக்க இந்திய தூதருக்கு அனுமதி கிடைத்தது. இது ஒரு முக்கியமான பிரச்சினை. இந்த வழக்கு குறித்து நாங்கள் தொடர்ந்து கவனித்து வருகிறோம். எதைப் பகிர முடியுமோ அதை பகிர்வோம்” என்று தெரிவித்தார்.
மேலும், சமீபத்தில் துபாயில் நடைபெற்ற காலநிலை மாற்றம் தொடர்பான ஐநா உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்ற பிரதமர் மோடி, அந்த மாநாட்டின் இடையே, கத்தார் மன்னர் ஷேக் தமிம் பின் ஹமாத் உடன் பேச்சுவார்த்தை நடத்தியதை நினைவு கூர்ந்தார். இருதரப்பு உறவு நன்றாக உள்ளதாகவும், அங்குள்ள இந்தியர்கள் நன்றாக இருப்பதாகவும் அரிந்தம் பக்சி தெரிவித்தார்.
இந்தியாவில் உள்ள தூதரகங்களை நிரந்தரமாக மூடுவதாக ஆப்கன் ஆட்சியாளர்களான தலிபான்கள் அறிவித்துள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அரிந்தம் பக்சி, ”டெல்லியில் உள்ள ஆப்கன் தூதரகமும், மும்பை மற்றும் ஹைதராபாத்தில் உள்ள தூதரகங்களும் இயங்குகின்றன. தூதரகத்தில் உள்ள கொடி எதை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பதில் இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. ஆப்கானிய தூதர்கள் இங்குள்ள ஆப்கானிஸ்தான் மக்களுக்கு தொடர்ந்து சேவைகளை வழங்குவார்கள்” என கூறினார்.
”நாடாளுமன்றத்தை தாக்கப் போவதாக நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பின் தலைவர் பன்னு வெளியிட்டுள்ள அறிவிப்பை முக்கியமானதாகக் கருதுகிறோம். அதேநேரத்தில், அதற்கு அதிக விளம்பரம் கொடுக்க விரும்பவில்லை. இது தொடர்பாக அமெரிக்க மற்றும் கனடா அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளோம்” என்றும் அரிந்தம் பக்சி தெரிவித்துள்ளார்.