வேளச்சேரியில் பள்ளத்தில் சிக்கிய 2 தொழிலாளர்களில் ஒருவரது உடல் இன்று (டிசம்பர் 8) அதிகாலை 3.30 மணி அளவில் மீட்கப்பட்டது.
மிக்ஜாம் புயலால் பெய்த பெருமழையால் சென்னைக்கு ஏற்பட்ட பாதிப்பு சாதரணமானது அல்ல. வீடுகளுக்குகுள், தொழிற்சாலைகளுக்குள் வெள்ளநீர் புகுந்து மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் உயிரிழப்புகளும் பதிவாகி வருகிறது. சென்னை – வேளச்சேரி ஐந்து பர்லாங் சாலை அருகே அமைந்துள்ள பெட்ரோல் பங்க் அருகில் கட்டுமான பணிக்காக வெட்டப்பட்ட சுமார் 50 அடி ஆழ பள்ளம் தோண்டப்பட்டது. பெருமழையால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணாமாக இந்த பள்ளத்தில் 6 பேர் சிக்கினர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு படையினர் சிலரை பத்திரமாக மீட்டனர். இருந்தும் அந்த பள்ளத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர் நரேஷ் மற்றும் கட்டுமான பொறியாளர் ஜெயசீலன் ஆகிய இருவர் சிக்கினர். அவர்களை மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
மீட்பு பணி நடைபெறும் இடத்தில் சிக்கியவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கண்ணீருடன் காத்திருந்தனர்.
பள்ளத்தில் இருந்த நீரை வெளியேற்றும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்றது. இதில் என்.எல்.சி, சென்னை மெட்ரோ ரயில் மற்றும் எல் அண்ட் டி உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து பணியாற்றின. பள்ளத்தில் மண் சரிவும் ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில் இன்று (டிசம்பர் 8) அதிகாலை 3.30 மணியளவில் பள்ளத்தில் சிக்கி இருந்த இரண்டு தொழிலாளர்களில் ஒருவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்டவர் நரேஷ் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலமாக பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து கட்டுமான பொறியாளர் ஜெயசீலனை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதில் சிக்கிய ஜெயசீலனின் மனைவி கர்ப்பிணி ஆவார். பள்ளத்தில் சிக்கியவர்களை விரைந்து மீட்க வேண்டும் என அவர்களது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.