பொன்முடிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலைக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில், வேலூர் நீதிமன்ற நீதிபதியின் விளக்க மனுவின் நகலை பொன்முடி தரப்பினருக்கு வழங்க பதிவுத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 36 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு, விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேலூர் நீதிமன்றத்துக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் நிர்வாக உத்தரவை பிறப்பித்தது. அதன்படி வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்றம், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவியை விடுதலை செய்து, கடந்த ஜூன் மாதம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம், தாமாக முன் வந்து, மறு ஆய்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கில், வேலூர் நீதிமன்ற நீதிபதி தனது விளக்கத்தை சமர்ப்பித்திருந்தார்.

இந்நிலையில், வேலூர் நீதிமன்ற நீதிபதியின் விளக்க மனுவின் நகலை வழங்கக் கோரி பொன்முடி மற்றும் அவரது மனைவி தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஜெயச்சந்திரன், வேலூர் நீதிமன்ற நீதிபதியின் விளக்க மனுவின் நகலை வழங்க உத்தரவிட்டார்.

அதேபோல, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த உத்தரவில், வழக்கை விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேலூர் நீதிமன்றத்துக்கு மாற்ற உயர் நீதிமன்றம் நிர்வாக ரீதியில் எடுத்த முடிவு தொடர்பான ஆவணங்களை வழங்கக் கோரியும், உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளரை வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்க கோரியும் பொன்முடி தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், தலைமைப் பதிவாளரை எதிர்மனுதாரராக சேர்த்து உத்தரவிட்டார். அதேபோல, வழக்கை வேலூர் நீதிமன்றத்துக்கு மாற்ற எடுத்த முடிவு தொடர்பான ஆவணங்களை வழங்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தலைமைப் பதிவாளருக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்ற நீதிபதி, விசாரணையை டிசம்பர் 12ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.