திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா எம்.பி பதவி பறிப்பு: சு.வெங்கடேசன் கண்டனம்!

பணம் பெற்றுக்கொண்டு நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதாக திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா மீது குற்றம்சாட்டப்பட்ட நிலையில், இன்று அவரது எம்.பி பதவி பறிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு சிபிஎம் எம்பி சு.வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் கிருஷ்ணாநகர் மக்களவைத் தொகுதியின் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் மஹூவா மொய்த்ரா. சமீபத்தில் இவர் மக்களவையில் எழுப்பியிருந்த கேள்விகள் பெரிய அளவில் விவாதமானது. அதாவது இவர் மொத்தம் 61 கேள்விகளை அவையில் எழுப்பியிருக்கிறார். அதில் 50 கேள்விகள் அதானி குழுமம் தொடர்பானவை. இதுதான் பாஜக தரப்புக்கு கடும் சந்தேகத்தை எழுப்பியது. பின்னர் பாஜக எம்பி நிஷிகாந்த் துபே மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், அதானி குழுமம் தொடர்பாக கேள்விகளை எழுப்ப ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் இருந்து மொய்த்ரா பெரும் தொகையை லஞ்சமாக பெற்றிருக்கிறார் என்றும், இது குறித்து மக்களவை நெறிமுறைகள் குழு விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

இதனையடுத்து பாஜக எம்பி வினோத் சோன்கர் தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வி.வைத்தியலிங்கம், டானிஷ் அலி, சுனிதா துக்கல், அப்ராஜித சாரங்கி, பிரனீத் கவுர், ஸ்வாமி சுமிதானந்த் ராஜ்தீப் ராய் ஆகியோர் அடங்கிய மக்களவை நெறிமுறைக்குழு இந்த வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்டது.
இக்குழு, புகார் அளித்த பாஜக எம்பி நிஷிகாந்த் துபே மற்றும் இந்த லஞ்ச விவகாரத்தை வெளியில் கொண்டு வந்த ஜெய் ஆனந்த் தேஹத்ராய் ஆகியோரிடம் கடந்த அக்டோபர் மாதம் 26ம் தேதி விசாரணை நடத்தி வாக்குமூலத்தை நெறிமுறைக்குழு பதிவு செய்தது. இதன் தொடர்ச்சியாக மஹூவா மொய்த்ராவிடமும் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. இறுதியாக தனது விசாரணை அறிக்கையை கடந்த நவ.9ம் தேதி வெளியிட்டிருந்தது. அதில் மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைத்திருந்தது. இதனையடுத்து இந்த பரிந்துரை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால் அவை மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் அவை கூடிய நிலையில் தன் மீதான குற்றச்சாட்டு குறித்து மொய்த்ரா பேச முயன்றார். ஆனால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனை எதிர்த்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் பரிந்துரை நிறைவேற்றப்பட்டு அவர் மக்களவையிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை எம்பி சு.வெங்கடேசன், “ரிஷிகாந்த் துபே துவங்கி ரமேஷ் பிதுரி வரை ஆளுங்கட்சி எம்பிக்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மற்றும் நெறிமுறைக்குழுவில் கொடுக்கப்பட்ட புகார்கள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படாத நிலையில், எதிர் கட்சி எம்பி மஹுவா மொய்த்ரா மீது கொடுக்கப்பட்ட புகாரை விசாரனைக்கு எடுத்துக்கொண்டு அவரது எம்.பி பதவியை பறித்ததன் மூலம் மற்றொருமொரு அநீதியை அரங்கேற்றியிருக்கிறது மோடியின் அரசு. வன்மையான கண்டனம்” என்று தெரிவித்துள்ளார்.