சென்னையில் மீண்டும் மழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது என தமிழக அரசின் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக நீர்நிலைகள் நிரம்பி சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்த நிலையில் அதனை வெளியேற்றும் வேலைகளிலும், அங்குள்ள மக்களை மீட்கும் வேலைகளிலும் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மீட்பு பணிகளை பார்வையிட்ட தலைமை செயலர் சிவதாஸ் மீனா செய்தியாளர்களைச் சந்தித்தார். சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக அரசின் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா கூறியதாவது:-
சென்னையின் 6 மண்டலங்களில் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. 0.04% மட்டுமே மின் இணைப்பு வழங்கப்பட வேண்டும். ஒருசில இடங்களை தவிர மற்ற இடங்களில் இன்று இரவுக்குள் மின்சாரம் வழங்கப்படும். சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து, மின்சாரம், பால் உள்ளிட்ட சேவைகள் சீராக உள்ளது. பள்ளிக்கரணையில் சில பகுதியில் மட்டும் தண்ணீர் இருக்கிறது. ஆனால் போக்குவரத்து தடைபடவில்லை. போக்குவரத்து, பால், குடிநீர் விநியோகம் சீரானது. வேளச்சேரியை பொறுத்தவரை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு இலவசமாக சர்வீஸ் செய்ய வாகன நிறுவனங்களை வலியுறுத்தியுள்ளோம். சென்னையில் மீண்டும் மழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது.
வரும் திங்கட்கிழமை முதல் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் செயல்படும். ஒருசில பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீர் இன்று இரவு அல்லது நாளைக்குள் அகற்றப்படும். வடசென்னையின் சில பகுதிகளில் மட்டும் மழைநீர் தேங்கியுள்ளது. மயிலாப்பூரில் ஒரு பகுதியைத் தவிர எந்தப் பகுதியிலும் மின் விநியோக பிரச்சனை இல்லை. மயிலாப்பூர் தபால் அலுவலக பகுதியில் மட்டும் மழைநீர் தேங்கியுள்ளது. மற்ற பகுதிகளில் மழைநீர் முழுவதும் அகற்றப்பட்டுள்ளது. 95% அதிகமான பகுதிகள் இயல்புநிலைக்கு வந்துவிட்டன. நேற்று நிவாரண முகாம்களில் 41,406 பேர் இருந்தனர். இன்று 18,780 பேர் மட்டுமே உள்ளனர். நேற்று 800 இடங்களில் தண்ணீர் தேங்கி இருந்ததாக புகார்கள் வந்தன. இன்று 343 இடங்களில் மட்டுமே தண்ணீர் தேங்கி உள்ளது. சென்னை மாநகரில் 0.43% மட்டுமே மின்வெட்டு உள்ளது. 22 சுரங்கப்பாதைகளில் 20 சுரங்கப்பாதைகள் செயல்பட தொடங்கிவிட்டன. சென்னையில் 488 பேருந்து வழித்தடங்கள் உள்ளன. அதில் 39 வழித்தடத்தில் மட்டுமே சிறிது நீர் உள்ளது. எனினும் அங்கும் போக்குவரத்து சீராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.