தொழிற்பேட்டைகள் மழைநீரால் பாதிப்பு அடைந்துள்ளது. எனவே தொழில் நிறுவனங்களுக்கான இழப்பீட்டினை அரசு வழங்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
மிக்ஜாம் புயல் காரணமாக கிண்டி, அம்பத்தூர், பெருங்குடி, திருமழிசை, திருமுடிவாக்கம், குன்றத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள தொழிற்பேட்டைகள் தண்ணீரில் மூழ்கி போயுள்ளன. அம்பத்தூர் தொழிற்பேட்டைக்குள் மழைநீர் புகுந்து விலையுயர்ந்த இயந்திரங்கள் பழுதாகிவிட்டன. இதனால் உற்பத்தி பாதிப்பு மற்றும் வேலையில்லா திண்டாட்டம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மட்டும் ரூ.2000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்றும், தொழில் வளர்ச்சி மற்றும் தொழிலாளர் நலன் ஆகியவற்றை கருத்தில் கண்டு, தொழில் நிறுவனங்களுக்கு உதவி செய்ய அரசு முன்வர வேண்டும் என்றும் அங்குள்ள தொழிலதிபர்கள் தெரிவிக்கின்றனர். தொழில் வளர்ச்சி என்பது சங்கிலி தொடர் போல பல காரணிகளுடன் பின்னி பிணைந்தது என்பதை கருத்தில் கொண்டு, தொழிற்பேட்டைகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் ஏற்பட்டுள்ள இழப்பை ஈடு செய்யவும், வருங்காலங்களில் இதுபோன்ற நிலைமை ஏற்படாமல் இருக்கவும் உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.