கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக பகுஜன் சமாஜ் எம்.பி. டேனிஷ் அலி கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் அம்ரோகா மக்களவை தொகுதி எம்.பி.யாக பதவி வகித்து வருபவர் பகுஜன் சமாஜ் கட்சியின் கன்வர் டேனிஷ் அலி. முன்னதாக மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்த டேனிஷ் அலி, 2019-ல் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தார். இந்த நிலையில் கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக டேனிஷ் அலியை பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து அதன் தலைமை நேற்று சஸ்பெண்ட் செய்தது.
இதுதொடர்பான கடிதத்தை எம்.பி. டேனிஷ் அலிக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சதீஷ் சந்திர மிஸ்ரா அனுப்பினார். அந்த கடிதத்தில், ‘மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து வந்த உங்களுக்கு, அதன் தலைவர் எச்.டி.தேவ கவுடாவின் பரிந்துரையின் பேரில் மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் பகுஜன் சமாஜ் கட்சியின் கொள்கைகள், கருத்தியல், ஒழுங்குக்கு எதிராக நீங்கள் தொடர்ந்து கருத்து கூறியுள்ளீர்கள். அவ்வாறு கூற வேண்டாம் என்று பலமுறை வாய்மொழியாக கேட்டுக்கொள்ளப்பட்டும் நீங்கள் அதை நிறுத்தவில்லை. எனவே, உங்களின் கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக, உங்களை பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து நீக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் குற்றச்சாட்டை மறுத்துள்ள டேனிஷ் அலி, இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை “துரதிர்ஷ்டவசமானது” என்றும், கட்சிக்கு சேவை செய்ய அவரை அனுமதித்ததற்காக மாயாவதிக்கு நன்றியும் தெரிவித்தார்.