‘நீட்’ தேர்வுக்கு எதிராக 72 லட்சம் பேர் கையெழுத்திட்டுள்ளதாகவும், இந்த கையெழுத்து ஆவணங்கள் விரைவில் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படும் என்றும் தி.மு.க. இளைஞர் அணி தெரிவித்துள்ளது.
தி.மு.க. இளைஞர் அணி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் முன்னெடுப்பில் `நீட் விலக்கு நம் இலக்கு’ என்ற கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. இதன்மூலம் தமிழ்நாடு முழுவதும் 50 லட்சம் பேரிடம் கையெழுத்து பெற முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்து என்ற இலக்குடன் இந்த கையெழுத்து இயக்கத்தை, தி.மு.க இளைஞர் அணி, மருத்துவ அணி, மாணவர் அணி இணைந்து, அக்டோபர் 21-ந் தேதி தொடங்கியது.
‘Banneet.in’ என்ற இணையதள பக்கம் வாயிலாகவும், அஞ்சல் அட்டைகள் மூலமாகவும் கையெழுத்து பெறும் வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான குழு விரிவான ஏற்பாடுகளை செய்திருந்தது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், முதல் கையெழுத்திட்டு இதை தொடங்கி வைத்தார். பொதுமக்கள், வியாபாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள் என அனைத்து தரப்பினரும் தன்னெழுச்சியாக `நீட் விலக்கு நம் இலக்கு’ கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்று கையெழுத்திட்டு ஆதரவளித்தனர். கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டு, இன்றுடன் 50 நாட்கள் நிறைவடையும் நிலையில், நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 50 லட்சம் என்பதை தாண்டி 72 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டு, நீட் விலக்குக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க ஜனாதிபதியை வலியுறுத்தும் வகையில் பெறப்பட்ட இந்த கையெழுத்துகளை, சேலத்தில் 24-ந் தேதி நடைபெறும் இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாட்டின்போது முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுவரை ‘நீட் விலக்கு நம் இலக்கு’ கையெழுத்து இயக்கம் தொடர்ந்து நடைபெறும். ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் மனங்களை பிரதிபலிக்கும் வகையில் பெறப்பட்டுள்ள இந்த கையெழுத்துகள், பின்னர் உரிய முறையில் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.