காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. தீரஜ் குமார் சாகு தொடர்புடைய இடங்களில் நடந்து வரும் வருமானவரித்துறை சோதனையில் கைப்பற்றப்பட்டுள்ள ரூ.300 கோடி குறித்து ராகுல் காந்தி பதில் சொல்ல வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சகோதரரே நீங்களும் உங்கள் தலைவர் ராகுல் காந்தியும் கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டும். இது புதிய இந்தியா. இங்கு ராஜ குடும்பம் என்ற பெயரில் வெகுஜனங்களை சுரண்ட முடியாது. நீங்கள் ஓடிப் போய் சோர்வடைந்து விடுவீர்கள். ஆனால் சட்டம் தனது கடமையைச் செய்யும். ஊழலுக்கு காங்கிரஸ் உத்திரவாதம் என்றால், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைக்கு நரேந்திர மோடி உத்தரவாதம். மக்களின் பணம் திரும்பப்பெறப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே பாஜகவைச் சேரந்த பாஜ்பாய் கூறுகையில், “இந்தச் சோதனை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறைகளுக்கு எதிராக தொடர்ந்து பேசி வந்தவர்களின், தங்களைக் காப்பாற்றிக்கொள்ள இண்டியா கூட்டணியை உருவாக்கியவர்களின் உண்மை நிலையை எடுத்துக்காட்டுகிறது. இவையெல்லாம் யாருடைய பணம் என்பதை ராகுல் காந்தி விளக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்தச் சோதனைகள் குறித்து லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) எம்.பி. சிராக் பஸ்வான் எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்துள்ளார் அவர் கூறுகையில், “எதிர்க்கட்சித் தலைவர்களின் பழைய பாரம்பரியம் இது. முதலில் அவர்கள் ஊழலில் ஈடுபடுவார்கள். பிடிபட்ட பின்னர் அவர்கள் அதை ஒதுக்கித் தள்ள முயற்சிப்பார்கள். இதில் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்று விசாரிக்கப்பட வேண்டும். யார் தவறு செய்திருந்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்றார்.
இந்த வருமானவரிச் சோதனைகள் குறித்து ஜார்கண்ட் எம்.பி. சுபோத் கந்த் சஹாய் கூறுகையில், “அவர்கள் மதுபானம் தொடர்பான வியாபாரம் செய்து அதிகமான பணம் சம்பாதிக்கிறார்கள் என்று சிறுவயது முதலே கேள்விப் பட்டுள்ளோம். அவரது (தீரஜ் சாகு) வீட்டில் இருந்து இவ்வளவு பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இதுகுறித்து தீரஜ் சாகு மற்றும் அவரது குடும்பத்தினர் விளக்கமளிக்க வேண்டும். யார் வீட்டில் இவ்வளவு பணத்தை வைத்திருப்பார்கள். ஆச்சரியமாக இருக்கிறது” என்றார்.
ஜார்கண்ட் சுகாதார அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான பன்னா குப்தா கூறுகையில், “தீரஜ் சாகு மற்றும் அவரது தந்தை குடும்பஸ்தர்கள். அவர்கள் மிகப்பெரிய வணிகக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். நூறாண்டுகளாக அவர்கள் வியாபாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இவை எல்லாம் லஞ்சப் பணம் இல்லை. அது ஒரு வகை கண்ணோட்டம். இந்தப் பணம் எங்கிருந்து வந்தது என்பதனை வருமான வரித்துறையினர் தெளிவுபடுத்த வேண்டும். விசாரணை நடந்து வருகிறது. விசாரணைக்கு பின்னர் எல்லாம் தெளிவாகும். இது அவரது தனிப்பட்ட விஷயம். இதற்கும் கட்சிக்கும் சம்மந்தம் இல்லை” என்று கூறினார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி தீரஜ் குமார் சாகு தொடர்புடைய பால்டியோ சாகு குழுமத்துக்கு மேற்கு ஒடிசாவில் பவுத் டிஸ்டிலெரி என்ற மதுபான ஆலை உள்ளது. மிகப் பெரியளவில் மதுபானங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் இந்நிறுவனமும் ஒன்று. பால்டியோ சாகு குழுமத்தினர் வரி ஏய்ப்பு செய்வதாக கிடைத்த தகவலை அடுத்து, ஒடிசாவின் சம்பல்பூர், ரூர்கேலா, பொலாங்கிர், சுந்தர்கர் மற்றும் புவனேஸ்வரில் இந்த குழுமத்துக்கு சொந்தமான இடங்களிலும், ஜார்க்கண்ட்டில் எம்.பி. தீரஜ்குமாருக்கு சொந்தமான இடங்களிலும், மேற்கு வங்கத்தில் உள்ள அலுவலகங்களிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் கடந்த 4 நாட்களாக சோதனை நடத்தினர்.
இதில் சனிக்கிழமை வரை 176 பணமூட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை ஒடிசாவின் பொலாங்கிரில் உள்ள எஸ்பிஐ வங்கி கிளைக்கு எடுத்துச் செல்லப்பட்டு எண்ணப்பட்டன. அதில் ரூ.290 கோடி இருந்தது. பெரும்பாலும் ரூ.500 கட்டுகளாக இருந்தன. தொடர்ந்து பணத்தை எண்ணியதால், பணம் எண்ணும் இயந்திரங்கள் பழுதடைந்தன. இதனால் பல வங்கிகளில் இருந்து பணம் எண்ணும் இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு எண்ணப்படுகின்றன. 3 இடங்களில் 7 அறைகளில் 9 லாக்கர்களில் உள்ள பணம் இன்னும் எண்ணப்படவில்லை. அலமாரிகள் மற்றும் பர்னிச்சர்களில் இந்தப்பணம் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. இன்னும் பல இடங்களில், நகை, பணம் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இவற்றை எண்ணி முடித்தபின், பறிமுதல் பணத்தின் மொத்த தொகை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இந்த சோதனையில் வருமானவரித்துறை அதிகாரிகள் 150 பேர் ஈடுபட்டுள்ளனர். ஹைதராபாத்தில் இருந்து 20 அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு மது ஆலையின் டிஜிட்டல் ஆவணங்களை சரிபார்க்கும் சோதனை நடைபெறுகிறது.