இந்தியர்களின் மதிப்பு என்பது வெளிநாடுளில் உயர்ந்துள்ளது என்றால் அதற்கு பிரதமர் மோடி தான் காரணம். பிரதமர் மோடி ஒழிக எனக்கூறாமல் வாழ்க என கூற வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
நடிகராக இருந்து அரசியலுக்குள் நுழைந்தவர் சரத்குமார். எம்பியாகவும், தென்காசி எம்எல்ஏவாகவும் இருந்த இவர் தற்போது சமத்துவ மக்கள் கட்சியை நடத்தி வருகிறார். கடந்த சட்டசபை தேர்தலில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி அமைத்து வேட்பாளர்களை நிறுத்தினார். இருப்பினும் அவரது வேட்பாளர்கள் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் தான் அடுத்த ஆண்டு வரும் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2026 சட்டசபை தேர்தலுக்கான பணியை சரத்குமார் தொடங்கி உள்ளார். அதன்படி சமத்துவ மக்கள் கட்சி சார்பில் தென்மண்டல நாடாளுமன்ற, சட்டசபை தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுக பொதுக்கூட்டம் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சரத்குமார் புகழ்ந்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
2026 சட்டசபை தேர்தலில் நாம் வெற்றி பெறுவதற்கான முயற்சி, உழைப்பை நான் எதிர்பார்க்கிறேன். 2024ல் நாடாளுமன்ற தேர்தல் என்பது எனது இலக்கு அல்ல. இன்னும் 4 மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் நின்று ஜெயித்து விட முடியும் என அகம்பாவமாக நான் பேசமாட்டேன். ஆனால் ஏதாவது ஒரு தொகுதியில் நின்று ஜெயிக்க முடியுமா? என்று பார்க்க வேண்டும். அந்த தொகுதியில் அனைவரும் சேர்ந்து பணியாற்ற வேண்டும். பணப்பலத்தை உடைத்து வெற்றி பெற முடியுமா? என பார்க்க வேண்டும். இங்கு ஒன்று மட்டும் சொல்ல வேண்டும். இங்கு பல தலைவர்கள் உள்ளனர். அவர்கள் அடையாளம் காட்டப்படாமல் உள்ளனர். துவேசத்தின் காரணமாக அவர்கள் அடையாளம் காட்டப்படவில்லை. உதாரணத்துக்காக ஒன்றை சொல்கிறேன். இதை சொன்னவுடன் பத்திரிகை சகோதரர்கள் அவரை சார்ந்து சென்று விடுவார் என எழுதிவிடாதீர்கள். எழுதினாலும் பரவாயில்லை.
இப்போது வெளிநாடுகளுக்கு இந்தியர்கள் சென்றால் மிகப்பெரிய மரியாதை இருக்கிறது. முன்பு கடைக்கு சென்றால் மரியாதை என்பது இருக்காது. அமெரிக்காவில் நான் ஒரு வாட்ச் வாங்க எனது மனைவி ராதிகாவுடன் சென்றேன். அங்கு சூட் போட்டு நின்றவன் எங்களை பார்த்தவுடன் கிட்ட கூட வரவில்லை. இதையடுத்து நான் அவன் அருகே சென்று வாட்ச் விலை எவ்வளவு? வாட்ச்சை காட்ட முடியுமா? என கேட்டேன். விலையை கூறினார். பொருளை காட்டும்படி கூறினேன். என்னை மேலும், கீழுமாக பார்த்தான். நிறத்தை வேறுபாட்டை வைத்து ஆசியன் என அறிந்தவன் நீயெல்லாம் இதை வாங்க போகிறாயா? என்பது போல் பார்த்தான். இந்தியாவில் இருந்து வந்து பேரம் பேசிவிட்டு செல்வார் என நினைத்தார். இதனால் வீம்புக்காக நான் அந்த வாட்ச்சை வாங்கினேன். ஆனால் இன்று வரை அதனை கட்டவில்லை. ஆனால் இப்போது எல்லாம் வெளிநாட்டில் கடைக்கு சென்றால் 10 பேர் ஓடிவருகிறார்கள். இந்தியன் நிச்சயமாக வந்து வாங்குவான். பொருளாதார அடிப்படையில் இந்தியர்கள் உயர்ந்து விட்டதாக வெளிநாட்டினர் நம்புகின்றனர்.
இதற்கு ஒரு காரணம் யார் என்றால் பிரதமர் மோடி என நான் சொல்வேன். துபாயில் பருவமழை மாற்றம் தொடர்பான மீட்டிங் நடக்கிறது. அதில் பிரதமர் மோடியுடன் இத்தாலி பிரதமர் செல்பி எடுக்கிறார். நன்றாக சிந்தித்து பார்க்க வேண்டும். ஆனால் இங்கு ஏதோ குக்கிராமத்தில் உள்ள ஒருவர் மோடி ஒழிக என்கிறார். நல்ல தலைவர் இருந்தால் வாழ்க என சொல்லி பழக வேண்டும். ஓட்டு போடுவதா இல்லையா என்பதை அடுத்ததாக தான் யோசிக்க வேண்டும். இந்தியாவின் பெயரை உலகளவில் உயர்த்தி இருக்கிறார். அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் ஓடிவந்து கைக்கொடுக்கிறார். உலகத்தின் பார்வையில் இந்தியாவை உயர்த்தி இருப்பவர் பிரதமர் மோடி என்பதை மனதில் வைத்து கொள்ள வேண்டும். பாஜகவுடன் சரத்குமார் கூட்டணி வைக்கிறார் என நினைத்தால் நினைத்து கொள்ளுங்கள். ஊழலற்ற ஆட்சியை தந்து கொண்டு இருக்கிறார்கள். சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலங்களில் வெற்றி வாகை சூடியுள்ளனர். நான் மதவாதத்தை எதிர்ப்பவன் தான். சாதி மதத்ததை கடந்த சமத்துவத்தை விரும்புவன் நான். இந்த மதம் தான் வேண்டும் என கூறுவதை நான் எதிர்ப்பேன். ஆனால் நல்ல தலைவரை பாராட்டவும் தயங்கமாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.