ஜம்மு காஷ்மீர் மறுவரையறை திருத்த மசோதா ராஜ்யசபாவில் தாக்கல்!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது செல்லும் எனவும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் இன்று அதிரடியாக தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் மறுவரையறை திருத்த மசோதாவை ராஜ்யசபாவில் மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்ய உள்ளார்.

2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ந் தேதி ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவை மத்திய பாஜக அரசு ரத்து செய்தது. அப்போது தாக்கல் செய்யப்பட்ட மசோதாவுடன் மேலும் 2 மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். அதில் ஒன்று ஜம்மு காஷ்மீர் மறுவரையறை மசோதா (Jammu and Kashmir (Reorganisation) Bill, 2019). இந்த மசோதா மூலமாகவே ஜம்மு காஷ்மீர் என்ற மாநிலமானது 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன. அதாவது ஜம்மு காஷ்மீர் என்கிற ஒரு யூனியன் பிரதேசமாகவும் லடாக் என்ற மற்றொரு யூனியன் பிரதேசமாகவும் ஒருங்கிணைந்த ஜம்மு காஷ்மீர் மாநிலம் பிளவுபடுத்தப்பட்டது. இதில் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு சட்டசபை உண்டு; லடாக் யூனியன் பிரதேசத்துக்கு சட்டசபையே கிடையாது என்றது அமித்ஷா கொண்டு வந்த அந்த தீர்மானம்.

அத்துடன் ஜம்மு காஷ்மீர் இடஒதுக்கீடு மசோதா ஒன்றையும் (Jammu & Kashmir Reservation (2nd Amendment) Bill, 2019) அமித்ஷா அப்போது தாக்கல் செய்தார். அம்மசோதாவானது, ஜம்மு காஷ்மீரில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யக் கூடியது. இந்த இரு மசோதாக்களும் அன்று ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டன. தற்போது இந்த இரு மசோதாக்களில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு கடந்த 6-ந் தேதி லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து இந்த திருத்த மசோதாவை ராஜ்யசபாவில் மத்திய உள்துறை அமைச்சர் தாக்கல் செய்ய உள்ளார்.

ராஜ்யசபாவில் மத்திய உள்துறை அமைச்சர் தாக்கல் செய்ய இருக்கும் ஜம்மு காஷ்மீர் மறுவரையறை, இடஒதுக்கீடு மசோதாவின் முக்கிய அம்சங்கள்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபையில் காஷ்மீர் அகதிகள் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு இடம் பெயர்ந்தவர்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்க வகை செய்யும். காஷ்மீர் அகதிகள் 2 பேரையும் பெண் ஒருவரையும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு இடம்பெயர்ந்த ஒருவரையும் எம்.எல்.ஏ.வாக நியமிக்க துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் தரும். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 107-ல் இருந்து 114 ஆக அதிகரிக்கப்படும். இதில் 7 இடங்கள் எஸ்சி, 9 இடங்கள் எஸ்டிக்கு ஒதுக்கப்படும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளையும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துடன் சேர்த்திருப்பதால் 24 எம்.எல்.ஏ. இடங்கள் காலியானதாக இருக்கும். இதனால் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 83-ல் இருந்து 90 ஆக இருக்கும்.