தெற்கு காசாவின் முக்கிய நகரத்தை இஸ்ரேல் குண்டுவீசித் தாக்கியிருக்கும் நிலையில், எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாதவரை எந்தவொரு பிணைக்கைதிகளும் உயிருடன் வெளியேற மாட்டார்கள் என ஹமாஸ் எச்சரித்துள்ளது.
இஸ்ரேல் மீது கடந்த 7-ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இஸ்ரேல் பாதுகாப்பு படை காசா நகர் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், கடந்த மாதம் தற்காலிக போர் நிறுத்தத்தின் போது 80 இஸ்ரேல் பிணைக் கைதிகளுக்கு இணையாக 240 பாலஸ்தீனக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இருப்பினும், தெற்கு காசாவின் முக்கிய நகரத்தை இஸ்ரேல் குண்டுவீசித் தாக்கியிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் தற்போது இஸ்ரேல் படையினர் நடத்தி வரும் கொடூரத் தாக்குதலுக்கு ஹமாஸ் அமைப்பினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
ஹமாஸிடம் இன்னும் பலர் பிணைக்கைதிகளாக உள்ளனர். அவர்களை மீட்க இஸ்ரேல் படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாத வரை எந்தவொரு பிணைக்கைதிகளும் உயிருடன் வெளியேற மாட்டார்கள் என ஹமாஸின் ஆயுதப்பிரிவின் செய்தி தொடர்பாளர் அபு ஒபையா எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர், “இஸ்ரேலிய படையுடன் தொடர்ந்து யுத்தம் நடத்துவோம். ஒவ்வொரு தெருவிலும், பகுதியிலும், காட்டுமிராண்டி ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக சண்டை போடுவதைத் தவிர வேறு வழியில்லை. எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாத வரை எந்தவொரு பிணைக்கைதிகளும் உயிருடன் வெளியேற மாட்டார்கள். அதோடு, எதிரிகள் எங்களுடைய எதிர்க்கும் தன்மையை உடைப்பதையே முக்கிய நோக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் நாங்கள் எங்கள் மண்ணில் புனிதமான முறையில் போராடுகிறோம்” என்றார்.
இதற்கிடையே காசாவில் புதிய போர் நிறுத்தத்தைக் கொண்டு வரவும், பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கான முயற்சியிலும் கத்தார் நாடு ஈடுபட்டு வருகிறது. ஆனால் இஸ்ரேல் தெற்கு காசா பகுதிகளை குறிவைத்து பயங்கர தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல், காஸா மீது தொடர் தாக்குதல்களை நடத்தி 17,000-க்கும் அதிகமான மக்களைக் கொன்றுள்ளதாக கூறப்படுகிறது.