காஷ்மீர் வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வருத்தம் தருகிறது: குலாம் நபி ஆசாத்!

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு வருத்தம் அளிப்பதாக குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019- ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு ரத்து செய்தது. இதேபோல், சட்டப்பிரிவு 35-ஏ வும் ரத்து செய்யப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது, ஜம்மு காஷ்மீரை சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும் பிரித்தது. இந்த நிலையில், ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து இருந்தது. இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பளித்தது. நாடே உற்று நோக்கிய இந்த வழக்கில், ஜம்மு காஷ்மீருக்கு “இறையாண்மை” என்பது கிடையாது. ஜம்மு காஷ்மீர் 370-வது பிரிவு என்பது தற்காலிகமானது, அப்போதைய போர் சூழ்நிலைக்காக உருவாக்கப்பட்டதுதான். ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியே ஜம்மு காஷ்மீர் மகாராஜாவுடனான ஒப்பந்தத்தின் போது இந்தியாவின் அரசியல் சாசனம் இறுதியானது என ஒப்புக் கொண்டார். இந்தியாவுடன் இணைந்த போதே ஜம்மு காஷ்மீர் இறையாண்மையை இந்தியாவிடம் முழுமையாக ஒப்படைத்துவிட்டது. எனவே, சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த நிலையில் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு வருத்தம் அளிப்பதாக குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும் ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியின் தலைவருமான குலாம் நபி ஆசாத் கூறுகையில், “உச்ச நீதிமன்றம் தீர்ப்பு துரதிர்ஷ்டவசமானது. நீதிமன்றத்தின் தீர்ப்பு மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. ஆனால் இந்த தீர்ப்பை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.