ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் நாளை ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்!

சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக நாளை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை 6-வது முறையாக சம்மன் அனுப்பி உள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் தலைவர் ஹேமந்த் சோரன் பதவி வகித்து வருகிறார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் சுரங்க உரிமைகள் விவகாரத்தில் மிகப் பெரிய ஊழல், சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நிகழ்ந்துள்ளது என்பது அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டு. இது தொடர்பான வழக்குகளில் ஜார்க்கண்ட் ஐஏஎஸ் அதிகாரியான சாவி ராஜன் உள்ளிட்ட 14 பேர் ஏற்கனவே அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டும் உள்ளனர். இந்த வழக்கில் ஹேமந்த் சோரனும் சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கனவே மற்றொரு சுரங்க முறைகேடு விவகாரத்தில் அமலாக்கத்துறையால் விசாரிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் ஹேமந்த் சோரன், ராஞ்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை அனுப்பும் 6-வது சம்மன் இது. அமலாக்கத்துறை விசாரணகளில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி ஹேமந்த் சோரன் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனால் நாளைய விசாரணைக்கு ஹேமந்த் சோரன் ஆஜராவாரா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.