டேவிட்சன் தேவாசீர்வாதத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை: டிஜிபி!

ஐ.பி.எஸ். அதிகாரி டேவிட்சன் தேவாசீர்வாதத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என தமிழக டிஜிபி அறிக்கை அளித்துள்ளதாக தமிழக அரசுத் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மதுரை மாநகர காவல் ஆணையராக டேவிட்சன் தேவாசீர்வாதம் பதவி வகித்த போது 200க்கும் மேற்பட்டோருக்கு போலி ஆவணங்களின் அடிப்படையில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. குறிப்பாக ஜூன் 2018 முதல் ஜூலை 2020 வரை மதுரை காவல் ஆணையராகப் பதவி வகித்த போது இவை அவரது மனைவி நடத்தும் டிராவல் ஏஜென்சி மூலம் வழங்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, இது சம்பந்தமான விசாரணையை 3 மாதங்களில் முடிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி வாராகி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில், ஐபிஎஸ் அதிகாரி டேவிட்சன் தேவாசீர்வாதம் மீதான புகார் குறித்து ஆரம்பகட்ட விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும், விசாரணையில் முகாந்திரம் இருந்தால் அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருக்கிறார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு, “200க்கும் மேற்பட்டவர்களுக்கு போலி பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 4 போலீஸாருக்கு எதிராக மட்டுமே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்ற வேண்டும்.” என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து தமிழக அரசு தரப்பில், மனுவின் அடிப்படையில் டிஜிபி விசாரணை நடத்தினார். பின்னர், ஐபிஎஸ் அதிகாரிக்கு எதிராக கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளாதகவும், இந்த தகவல் கடந்த செப்டம்பர் மாதமே மனுதாரருக்கு தெரிவிக்கப்பட்டுவிட்டது எனவும் தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், அரசு கடிதம் கிடைத்ததா? என மனுதாரர் தரப்புக்கு கேள்வி எழுப்பினர். அதுகுறித்த தகவல்களை கேட்டு தெரிவிப்பதாக மனுதாரர் தரப்பில் பதிலளிக்கப்பட்டதை அடுத்து, வழக்கின் விசாரணையை ஜனவரி 31ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.