சவ ஊர்வலங்களால் பாதிப்பு: தானாக முன்வந்து வழக்கு தொடர்ந்த உயர்நீதிமன்றம்!

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த அன்புச்செல்வன் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் சவ ஊர்வலம் நடத்த வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் எழுதிய கடிதத்தை படித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, தானாக முன்வந்து வழக்கு தொடர்ந்துள்ளதுடன், தமிழ்நாடு அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்தவர் அன்புச்செல்வன். இவர் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலாக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அன்புச்செல்வன் கூறுகையில், கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் கடந்த செப்டம்பரில் ஒரு சவ ஊர்வலம் சென்றது. அப்போது உடலை மயானத்திற்கு எடுத்துச்சென்ற வாகனத்தில் இருந்து வீசப்பட்ட மாலைகள் சாலையில் சிதறிக்கிடந்தன. இந்த மாலையால் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற சாப்ட்வேர் என்ஜினீயர் ராஜ்கமல் என்பவர் விபத்தில் சிக்கினார். அந்த மாலை வாகனத்தில் சிக்கியதால் தடுமாறி விழுந்த சாப்ட்வேர் என்ஜினீயர் ராஜ்கமல், தனது தாயார் கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்தார். சவ ஊர்வலங்களின்போது மாலைகள், பூக்களை சாலைகளில் கொட்டுவதும், போக்குவரத்தை நிறுத்துவதும், அதிக சத்தம் தரும் பட்டாசுகளை வெடிப்பதும் போன்ற நிகழ்வுகள் தமிழகத்தில் சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. மேலும் குடிபோதையில் பல சவ ஊர்வலங்களில் தகராறு ஏற்பட்டு சட்டம்-ஒழுங்கு பிரச்சினையும் ஏற்பட்டு வருகிறது. சவ ஊர்வலங்களின் போது ஏற்படும் பிரச்சனைகளால் தமிழகத்தில் பொதுமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படுகிறது. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் பெரும் சிரமம் ஏற்படுகிறது. நோயாளிகளை அவசரமாக மருத்துவமனைக்கு ஏற்றிச்செல்லும் ஆம்புலன்ஸ்களுக்கும் தொடர்ந்து தடங்கல் ஏற்படுகிறது. பல இடங்களில் சவஊர்வலத்தின்போது சாதி ரீதியிலான தகராறுகளும் ஏற்படுகிறது. எனவே, இந்த விஷயத்தில் ஒரு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கடிதத்தில் தலைமை நீதிபதிக்கு கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த கடிதத்தை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா படித்து பார்த்தார். பின்னர், இந்த கடிதத்தையே மனுவாக கருதி, தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட சென்னை உயர்நீதிமன்ற முதல் பெஞ்சில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சவ ஊர்வலத்தை நடத்த வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது குறித்து தமிழ்நாடு அரசும், டி.ஜி.பி.யும் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.