ஜிஎஸ்எல்வி. ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான கிரையோஜெனிக் A17 என்ஜின், மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக இஸ்ரோ தெரிவித்திருக்கிறது.
சந்திரயான் 3 வெற்றி, அதை தொடர்ந்து ஆதித்யா எல் 1 வெற்றி என இஸ்ரோவுக்கு இந்த ஆண்டு மறக்க முடியாத ஆண்டாக இருக்கிறது. இந்த வெற்றிகளுக்கு காரணம் கிரையோஜெனிக் என்ஜின்கள்தான். விண்வெளி துறையில் காலடி எடுத்து வைக்க நினைத்தபோது, சொந்தமாக ராக்கெட் உற்பத்தி என்பது அவசியமாக இருந்தது. ஆனால் இந்திய விஞ்ஞானிகளிடம் இது தொடர்பான திட்டங்கள் ஏதும் இல்லை. அமெரிக்கா ராக்கெட் என்ஜினை எப்படி தயாரிப்பது என்பது குறித்த விவரங்களை பகிரிந்தகொள்ள முன்வந்தது. ஆனால் இதற்கு அதிக அளவு பணம் கேட்டது. அப்போதைய காலகட்டத்தில் இந்த அளவு பணத்தை இந்தியாவால் நிச்சயமாக கொடுக்க முடியாது. எனவே, விண்வெளி துறையில் இந்தியா நுழையும் நாட்கள் தள்ளி போய்க்கொண்டே இருந்தது. இந்த சூழலை உணர்ந்த ரஷ்யா, இலவசமாகவே ராக்கெட் என்ஜின் தயாரிப்பு குறித்த தகவல்களை பகிர முன்வந்தது. இது அற்புதமான வாய்ப்பு. ஆனால் இதையும் அமெரிக்கா உள்ளே புகுந்து குழப்பிவிட்டது. எனவே விடாமுயற்சி செய்து இந்திய விஞ்ஞானிகள் தங்களுக்கு என தனியாக ஒரு என்ஜினை உருவாக்கினார்கள். அதுதான் கிரையோஜெனிக். இது ராக்கெட்டை விண்வெளியில் செலுத்துவதற்கு போதுமானதாக இருந்தது. இதில் எரிபொருளாக திரவ ஆக்ஸிஜன் மற்றும் திரவ ஹைட்ரஜன் பயன்படுத்தப்பட்டது. காலப்போக்கில் இந்த என்ஜினில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. மேற் குறிப்பிட்டதை போல சந்திரயான் 3 வெற்றிக்கும், மங்கள்யான் வெற்றிக்கும், ஆதித்யா எல்1 வெற்றிக்கும் கிரயோஜெனிக் என்ஜினின் பங்கு அளப்பரியது.
இந்நிலையில் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான கிரையோஜெனிக் A17 என்ஜின் தயாரிப்பில் இஸ்ரோ தற்போது கவனம் செலுத்தி வருகிறது. இது தொடர்பாக மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் நடைபெற்ற சோதனை வெற்றியடைந்துள்ளதாக இஸ்ரோ கூறியுள்ளது. நேற்று மாலை மகேந்திரகிரி இஸ்ரோ மைய இயக்குநர் ஆசீர் பாக்கியராஜ் முன்னிலையில், ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் கிரையோஜெனிக் ஏ-17 என்ஜின் சோதனை நடைபெற்றது. நிர்ணயிக்கப்பட்ட 200 வினாடி இலக்கை கடந்து என்ஜின் வெற்றிகரமாக இயக்கி சோதனை நடத்தப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்த வெற்றி விண்வெளித்துறையில் இந்தியாவை மேலும் ஓரடி முன்னே நகர்த்தும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.