நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மத்திய அரசு இந்த விவகாரத்தில் உரிய விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், பலத்த பாதுகாப்பையும் மீறி மக்களவையில் 2 நபர்கள் நுழைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பார்வையாளர் மாடத்தில் இருந்து மக்களவைக்குள் குதித்த அந்த நபர்கள், கண்ணீர் புகை குண்டு வீசும் குப்பிகள் போன்ற பொருளை வீசினர். அதிலிருந்து மஞ்சள் நிற புகை வெளியாகி மக்களவை முழுவதும் பரவியது. அந்த நபர்கள் கைது செய்யப்பட்டனர்.இதேபோல் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே மஞ்சள் மற்றும் சிவப்பு நிற புகையை வெளிப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-
நாடாளுமன்றத்தில் புகைக் குப்பி வீசப்பட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது, அதில் நான் அரசியல் செய்ய விரும்பவில்லை. மத்திய அரசு இந்த விவகாரத்தில் உரிய விசாரணையை மேற்கொண்டு, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கான ரூ. 6,000 நிவாரணத் தொகையை அடுத்த 3 நாட்களில் வழங்க ஆரம்பித்து விடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.