எம்.பி பதவியில் இருந்து தான் நீக்கப்பட்டதற்கு எதிராக மஹுவா மொய்த்ரா கடந்த 11-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பாக இன்று விசாரணை நடைபெற்ற நிலையில், இந்த வழக்கின் விசாரணையை ஜனவரி 3-ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
மஹுவா மொய்த்ரா தனது மனுவில், எம்.பி பதவியில் இருந்து தாம் நீக்கப்பட்டது ‘சட்டவிரோதம்’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிரான தனது மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மஹுவா மொய்த்ரா கோரிக்கை கடந்த 13-ஆம் தேதி கோரிக்கை விடுத்தார். டிசம்பர் 15-ஆம் தேதி முதல் உச்ச நீதிமன்றத்துக்கு குளிர்கால விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், தன்னுடைய மனுவை அவரச வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் எனவும், இந்த மனுவை விசாரிக்க டிசம்பர் 13 அல்லது நாளை டிசம்பர்-14 ஆகிய தேதிகளில் பட்டியலிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் அவர் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, மஹுவா மொய்த்ராவின் மனுவை பட்டியலிடுவது தொடர்பாக தலைமை நீதிபதி சந்திரசூட் முடிவு செய்வார் என்று உச்ச நீதிமன்றம் தரப்பில் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து தலைமை நீதிபதி, இந்த விஷயம் பதிவு செய்யப்படாமல் இருக்கலாம். அதனால், மின்னஞ்சல் மூலமாக உடனடியாக முறையீடு செய்யுமாறும், தான் அதுகுறித்து உடனடியாக முடிவெடுப்பதாகவும் மஹுவா மொய்த்ரா தரப்புக்கு பதிலளித்திருந்தார். இந்நிலையில், இன்று இது தொடர்பான விசாரணையின்போது மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை ஜனவரி 3-ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஆவணங்களை ஆய்வு செய்ய அவகாசம் தேவை என்பதால் வழக்கின் விசாரணையை ஒத்திவைப்பதாக நீதிமன்றம் கூறியுள்ளது.