இந்தியா கூட்டணி கட்சிகளின் நான்காவது கூட்டம் டெல்லியில் வரும் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது.
அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க., வரும் தேர்தலிலும் வென்று ஹாட்ரிக் முறையாக ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று தீவிரம் காட்டி வருகிறது. இந்த சூழலில் 2024 மக்களவைத் தோ்தலில் ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் ஒருங்கிணைந்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கியுள்ளன. காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி உள்ளிட்ட பிரதான எதிா்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் ‘இந்தியா’ கூட்டணியின் முதல் மூன்று ஆலோசனைக் கூட்டங்கள் முறையே பாட்னா, பெங்களூரு, மும்பை ஆகிய நகரங்களில் நடைபெற்றன.
இதனிடையே தெலுங்கானா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மத்தியப் பிரதேச தலைநகா் போபாலில் இந்தியா கூட்டணியின் நான்காவது கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கூட்டணி கட்சிகளின் முக்கியத் தலைவர்களான மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின், நிதிஷ் குமார், அகிலேஷ் யாதவ் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்க முடியாத சூழல் நிலவியதால் கூட்டம் ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்தியா கூட்டணி கட்சிகளின் நான்காவது கூட்டம் டெல்லியில் வரும் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த நிலையில், டெல்லியில் நடைபெற உள்ள இந்தியா கூட்டணி கட்சிகளின் நான்காவது ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வரும் 19 ஆம் தேதி காலை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளார்.