நாடாளுமன்ற அத்துமீறல் துரதிர்ஷ்டவசமானது, கவலைக்குரியது: பிரதமர் மோடி!

மக்களவையில் நடந்த பாதுகாப்பு அத்துமீறல் துரதிர்ஷ்டவசமானது, கவலைக்குரியது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் சாகர் சர்மா மற்றும் மனோரஞ்சன் ஆகியோர் பூஜ்ஜிய நேரத்தின் பொது கேலரியில் இருந்து லோக்சபாவுக்குள் குதித்தனர். மேலும், தங்கள் கைகளில் இருந்த புகை வரும் குப்பிகளையும் அவர்கள் வீசினர். இதையடுத்து சபாநாயகரை நோக்கி கோஷங்களை எழுப்பியவாறு அவர்கள் சென்ற நிலையில், அங்கிருந்த எம்பிக்களே அவர்களைப் பிடித்துக் கொடுத்தனர். பிரதமர் மோடி: இதற்கிடையே நாடாளுமன்றத்தில் ஸ்ப்ரே தாக்குதல் நடந்து சில நாட்கள் ஆகியுள்ள நிலையில், இது தொடர்பாக பிரதமர் மோடி கருத்து கூறியுள்ளார். இந்தத் தாக்குதலைத் துரதிர்ஷ்டவசமானது என குறிப்பிட்ட அவர், இந்தச் சம்பவம் நிஜமாகவே கவலைக்குரியது என்றும் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா தேவையான தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் இந்தச் சம்பவத்தின் தீவிரத்தை குறைத்து மதிப்பிடக் கூடாது என்றும் பிரதமர் மோடி கூறினார்.

இது தொடர்பாகப் பிரதமர் மோடி மேலும் கூறுகையில், “நாடாளுமன்றத்தில் நடந்த சம்பவத்தின் தீவிரதன்மையை குறைத்து மதிப்பிடக்கூடாது. இந்த விவகாரத்தில் சபாநாயகர் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்” என்று கூறியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. அவர் மேலும் கூறுகையில், “இந்த விவகாரத்தில் புலனாய்வு அமைப்புகள் முழு விசாரணையை நடத்தி வருகிறது. இதற்குப் பின்னணியில் இருக்கும் காரணங்கள் குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் திட்டம் என்ன? வரும் காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க என்ன செய்து தீர்வு காண வேண்டும் என்பது குறித்து நாம் முடிவெடுக்க வேண்டும். எந்தவொரு முன்முடிவும் இல்லாமல் இந்த விவகாரத்தை நாம் அணுக வேண்டும். இதுபோன்ற விஷயங்களில் சர்ச்சை அல்லது எதிர்ப்பை தவிர்க்க வேண்டும்” என்றார்.